ஆர்.சி.பி கோப்பையை வெல்ல இதான் காரணம் - புவனேஷ்வர் குமார் பேட்டி

பெங்களூரு, அண்மையில் முடிவடைந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிதூக்கியது. ஐ.பி.எல். அறிமுகம் ஆன 2008-ம் ஆண்டில் இருந்தே ஆடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு முதல் 17 ஆண்டுகள் பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. அந்த அணியின் 18 ஆண்டு கால ஏக்கம் இந்த ஐ.பி.எல். சீசனோடு தணிந்தது. ஐ.பி.எல். வரலாற்றில் முதல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. முதல் முறையாக கோப்பையை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணியினருக்கு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடந்தது. இந்நிலையில், கேப்டனாக ரஜத் படிதார் வெற்றிக்கு பெரிதாக எதுவும் செய்யவில்லை என்று ஆர்.சி.பி அணிக்காக விளையாடும் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஆர்.சி.பி என்னை அல்லது விராட் கோலி உட்பட யாரை வாங்கினாலும் அவர்கள் தங்களுடைய சொந்த நட்பை தாண்டி களத்தில் அணிக்காக நன்றாக விளையாட வேண்டும். களத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். இம்முறை ஆர்.சி.பி அணி அனுபவமிக்கதாக இருந்தது வெற்றியின் சிறந்த பகுதியாகும். ரஜத் அதிகமாக செய்வதற்கு எதுவுமில்லை. அவர் தயக்கமின்றி முடிவுகளை எடுத்தார். எப்போது முடிவுகளை மாற்ற வேண்டும், எப்போது அப்படியே விட வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருப்பதில் அவருடைய தரம் சிறந்தது. இம்முறை ஆர்.சி.பி அணியில் மிகப்பெரிய வித்தியாசம் என்னவெனில் லெவனில் இருந்த வீரர்கள் அனைவருமே வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு போட்டிகளை வென்று கொடுத்தனர். பொதுவாகவே நீங்கள் ஓரிரு வீரர்களை சார்ந்திருந்தால் பெரிய தொடரை வெல்ல முடியாது. சில போட்டிகளில் பவுலர்கள் முன்னே வந்து அசத்தினார்கள். மற்ற போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் அசத்தினார்கள். ஒவ்வொரு மேடையிலும் ஒரு புதிய வீரர் வந்து எங்களுடைய வெற்றிக்கு உதவினார். இவ்வாறு அவர் கூறினார்.
மூலக்கதை
