புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக பவன் ஷெராவத் நியமனம்

சென்னை, நடப்பு சாம்பியன் அரியானா ஸ்டீலர்ஸ், புனேரி பால்டன்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், பாட்னா பைரட்ஸ், யு மும்பா, உ.பி.யோத்தாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், தமிழ் தலைவாஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கும் 12-வது புரோ கபடி லீக் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. இதன் லீக் ஆட்டங்கள் முறையே விசாகப்பட்டினம் (ஆக.29-செப்.11), ஜெய்ப்பூர் (செப்.12-27), சென்னை (செப்.29-அக்.12), டெல்லி (அக்.13-22) ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. தொடக்க நாளன்று இரவு நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்-தமிழ் தலைவாஸ் அணிகள் மோதுகின்றன. இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் மும்பையில் கடந்த மே 31 மற்றும் ஜூன் 1-ந் தேதி நடந்தது. இதில் ஒவ்வொரு அணிகளும் தக்கவைத்த வீரர்கள் போக தங்களது வியூகத்துக்கு தேவையான புதிய வீரர்களை வாங்கின. அத்துடன் ஒவ்வொரு அணியும் கோப்பையை கையில் ஏந்தும் நோக்குடன் கடந்த மாதம் முதல் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் மற்றும் சீருடை அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் அனைவரும் பங்கேற்றனர். அணியின் புதிய கேப்டனாக பவன் ஷெராவத்தும், துணை கேப்டனாக முன்னணி ரைடர் அர்ஜூன் தேஷ்வாலும் அறிவிக்கப்பட்டனர். அவர்களை அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் சஞ்சீவ் பால்யன், உதவி பயிற்சியாளர் சுரேஷ் குமார் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர். அத்துடன் புதிய சீருடையும் அறிமுகம் செய்யப்பட்டது. போட்டி குறித்து பவன் ஷெராவத் கூறுகையில், ‘நான் சென்னை ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன். இங்கு நிறைய பேர் கபடியை விரும்புகிறார்கள். தீவிரமான ரசிகர்களான அவர்கள் முடிவை பற்றி பொருட்படுத்தாமல் ஆட்டத்தை அதிகம் ரசிக்கக்கூடியவர்கள். எங்கள் அணியின் கலவை மிகவும் சிறப்பாக இருக்கிறது. அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் இளம் நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இதுபோன்று அணி அமைவது அரிதானதாகும். நாங்கள் போட்டிக்கு தயாராக இருக்கிறோம்’ என்றார்.
மூலக்கதை
