‘தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்’; குற்றச்சாட்டுகளை ஏற்ற ‘ஊபர்’

தினமலர்  தினமலர்
‘தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்’; குற்றச்சாட்டுகளை ஏற்ற ‘ஊபர்’

புதுடில்லி–பிரபல ‘கால் டாக்சி’ சேவை நிறுவனமான ‘ஊபர்’ மீது, ஊடகங்கள் கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் முன்வைத்ததை அடுத்து, அந்நிறுவனம், கடந்த கால தவறுகளை ஒப்புக்கொள்வதாகவும், ஆனால் இப்போது வேறுமாதிரியான நிறுவனமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.


‘சர்வதேச புலானாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு’ ஊபர் நிறுவனத்தின் கடந்த கால முறைகேடுகள் பலவற்றை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி உள்ளன. குறிப்பாக, கட்டுபாட்டு அமைப்புகளின் நடவடிக்கைகளை தவிர்க்கும் வகையில், திருட்டுத்தனமான தொழில்நுட்பத்தை இந்நிறுவனம் பயன்படுத்தி பலனடைந்துள்ளது என்றும்; சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, இதை எளிதாக செய்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.இதற்கு பதிலளித்துஉள்ளது ஊபர் நிறுவனம். அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: கடந்த கால நடவடிக்கைகளுக்கு நாங்கள் சாக்குப்போக்கு சொல்ல விரும்பவில்லை; சொல்லவும் மாட்டோம்.


ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் நாங்கள் எவ்வாறு செயல்பட்டோம் என்பதை வைத்து, எங்களை மதிப்பிடுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இந்த தவறுகளுக்கு, பல மூத்த அதிகாரிகள் நீக்கப்பட்டனர். தாரா கோஸ்ரோஷாஹி 2017ல் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பிறகு, இப்போது இது வித்தியாசமான நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்துஉள்ளது.



மூலக்கதை