ஐபிஎல் 2022; மும்பை அணி வெற்றி: பெங்களூரு அணி ரசிகர்கள் கொண்டாட்டம்

தினகரன்  தினகரன்
ஐபிஎல் 2022; மும்பை அணி வெற்றி: பெங்களூரு அணி ரசிகர்கள் கொண்டாட்டம்

மும்பை: நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் கடைசி லீக் போட்டியில் டெல்லி அணி தோல்வியை தழுவியதால் பெங்களூரு அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. பெங்களூரு அணி வீரர்களும் ரசிகர்களும் மும்பை அணியின் வெற்றியை கொண்டாடி தீர்த்தனர். லீக் சுற்றை 16 புள்ளிகளுடன் நிறைவு செய்திருந்த பெங்களூரு அணியின் பிளேஆஃப் வாய்ப்பு டெல்லி மும்பை அணியின் கடைசி லீக் சுற்றின் முடிவை பொறுத்தே இருந்தது. மும்பை அணி வெற்றி பெற்றால் பிளேஆஃப் சுற்றுக்கு பெங்களூரு அணி செல்லும் என்பதால் பெங்களூரு அணியின் ரசிகர்கள் ஆவலோடு டெல்லி மும்பை போட்டியை காண குவிந்திருந்தனர். மும்பை அணி வெற்றியை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க வான்கடே மைதானத்தில் பெங்களூரு அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். ஆட்டம் டெல்லி மும்பை அணிகளுக்கு இடையே இருந்தாலும் மைதானத்தில் ரசிகர்கள் \'ஆர்சிபி ஆர்சிபி\' என கோஷமிட்டனர்.பெங்களூரு ரசிகர்கள் மட்டுமில்லாமல் வீரர்களும் மும்பை அணியின் வெற்றியை ஓய்வறையில் எதிர்பார்த்து காத்திருந்தனர். மும்பை அணி வெற்றி பெற்றவுடன் ஆர்சிபி கேப்டன் டுபிளசி, கோலி, மேக்ஸ்வெல் உள்ளிட்டோர் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். 4-வது அணியாக பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியதை கொண்டாடும் விதமாக கேஜிஎப் வெர்சனில் பெங்களூரு அணி வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதகளப்படுத்தியது.

மூலக்கதை