அமைச்சர்கள் இலாகா விரைவில் மாற்றம்!

தினமலர்  தினமலர்
அமைச்சர்கள் இலாகா விரைவில் மாற்றம்!

அமைச்சர்கள், 18 பேர் துறை ரீதியாக சரிவர செயல்படவில்லை என்றும், ஒன்பது அமைச்சர்கள் மீது அதிகாரிகள், கட்சியினர் மத்தியில் ஏராளமான குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், உளவுத் துறை தரப்பில், முதல்வருக்கு அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது. அதையடுத்து, அரசு நிர்வாகத்தை சீர்செய்யும் வகையில், சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக, ஆளும் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்ற பின், தமிழகத்தில் நடந்த சில சம்பவங்கள், அவரை வருத்தம் அடைய வைத்துள்ளன.

1அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில், கடந்த 26ல், வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அது, தி.மு.க.,வுக்கும், வருமான வரித் துறைக்கும் இடையிலான மோதலாக மாற்றப்பட்டது.

இந்த விவகாரம், தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி, தி.மு.க.,வுக்கு அவப்பெயரை பெற்று தந்துள்ளது. வருமான வரி அதிகாரிகளை தாக்கிய தகவல் தெரிய வந்ததும், 'வன்முறை சம்பவம் தொடரக் கூடாது' என, வெளிநாட்டில் இருந்த முதல்வர் எச்சரித்துள்ளார்.

அதை மதிக்காமல், அன்று இரவே, கரூரில் மறியல் நடத்திய செய்தி, முதல்வருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, 'செந்தில் பாலாஜியிடம் உள்ள இலாகாவை மாற்ற வேண்டும்' என, மூத்த அமைச்சர்கள் சிலர் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.

மின்சாரம், 'டாஸ்மாக்' என வளம் கொழிக்கும் துறைகள் என்பதால், அவற்றை கைப்பற்ற, சில அமைச்சர்கள் காய் நகர்த்தி வருகின்றனர்.

2பள்ளி கல்வித் துறை நிர்வாக செயல்பாடுகளில், அமைச்சர் மகேஷ் மீது, ஆசிரியர்கள், அதிகாரிகள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நடந்த கட்சியினர் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் மகேஷ் முன்னிலையில், அவரை தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் கடுமையாக சாடினார்.

'அமைச்சரை வரவேற்க, லட்சக்கணக்கான பணம் செலவு செய்கிறோம்; பல மணி நேரம் காத்திருக்கிறோம். நிர்வாகிகளை அலட்சியப்படுத்தி விட்டு, அவசரமாக சென்று விடுகிறார். தொண்டர்கள் தரும் பொன்னாடைகளை கூட வாங்குவதில்லை; அவர்களிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை.

'இந்த லட்சணத்தில் அமைச்சர் இருந்தால், லோக்சபா தேர்தலில், மக்களிடம் ஓட்டு எப்படி வாங்க முடியும்?' என பொரிந்து தள்ளி விட்டார்.

இந்த அளவுக்கு வெளிப்படையாக அமைச்சர் மகேஷுக்கு, கட்சியில் கடும் எதிர்ப்பு காணப்படுகிறது.

3அரசு போக்குவரத்து ஊழியர்களுடன் சரிவர பேச்சு நடத்தாமல், அவர்கள் திடீர் பஸ் நிறுத்தப் போராட்டம் நடத்தும் அளவுக்கு சென்றதால், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செயல்பாடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

தி.மு.க., தொழிலாளர்கள் சங்கத் தலைவரும், எம்.பி.,யுமான சண்முகத்திற்கும், சிவசங்கருக்கும் பனிப்போர் நிலவி வருவதும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

4விழுப்புரம் கள்ளச்சாராயம் உயிரிழப்பு சம்பவத்தில், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மஸ்தான் மீதும், கட்சி தலைமைக்கு கடும் கோபம் உள்ளது.

5அரிசி கொம்பன் யானை, ஊருக்குள் புகுந்து, பொது மக்களை தாக்கிய விவகாரத்தில், வனத் துறை அமைச்சர் மதிவேந்தனின் செயல்பாடுகள் மீது குறை சொல்லப்படுகிறது.

6நுாற்றாண்டு பழமை வாய்ந்த, சென்னை ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பொறுப்பில், ஜெயலலிதா ஆதரவு டாக்டரை நியமித்த விவகாரம், ஆளும் கட்சி தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டமைப்பு வசதிகளை செய்து தராமல், டாக்டர்கள், பேராசிரியர்கள் நியமனத்தில் அலட்சியம் காட்டியதால், மூன்று அரசு மருத்துவக் கல்லுாரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அந்த அளவிற்கு சுகாதாரத் துறை மந்தமாக இருப்பதாகவும், பாம்புக்கடிக்கு கூட கிராமங்களுக்கு மருந்து அனுப்பாமல், அத்துறை செயலற்று கிடப்பதாகவும், குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதெல்லாம், அந்த துறை அமைச்சர் மா.சுப்ரமணியனுக்கு எதிராக திரும்பி உள்ளன.

அமைச்சர்களை நிழல் போல் தொடர்ந்து கண்காணித்து வரும் உளவுத் துறை தயாரித்த அறிக்கையில், மூத்த அமைச்சர்கள் உட்பட 18 பேர், சரிவர தங்கள் துறைகளை கவனிக்கவில்லை என்றும், ஒன்பது அமைச்சர்கள் மீது, அதிகாரிகள் மத்தியிலும், கட்சியினரிடத்திலும் நிறைய குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

வெளிநாடு சென்று திரும்பியுள்ள முதல்வர் ஸ்டாலின், உளவுத் துறை அறிக்கை குறித்து ஆலோசித்து, அரசு நிர்வாகத்தை சீர்செய்யும் வகையில், அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றம் செய்ய உள்ளார். தேவைப்பட்டால், அமைச்சரவையிலும் சில மாற்றங்கள் செய்யப்படலாம்.இவ்வாறு ஆளும் கட்சி வட்டாரங்கள் கூறின.


@Image@ வௌிநாடுசெல்கிறார்தியாகராஜன்?

- நமது நிருபர் -

அமைச்சர்கள், 18 பேர் துறை ரீதியாக சரிவர செயல்படவில்லை என்றும், ஒன்பது அமைச்சர்கள் மீது அதிகாரிகள், கட்சியினர் மத்தியில் ஏராளமான குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், உளவுத் துறை தரப்பில்,

மூலக்கதை