பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு.. 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் ராகுல் காந்தியின் ஜாமீன் ஏப்ரல் 13 வரை நீட்டிப்பு!!

தினகரன்  தினகரன்
பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு.. 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் ராகுல் காந்தியின் ஜாமீன் ஏப்ரல் 13 வரை நீட்டிப்பு!!

சூரத்: பிரதமர் மோடி குறித்து பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் சூரத் மாவட்ட நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். கடந்த 2019ம் ஆண்டு கர்நாடகாவின் கோலாரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு பாஜவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த பாஜ எம்எல்ஏ புர்னேஷ் மோடி, ‘ராகுலின் பேச்சு மோடி சமூகத்தினரை இழிவுபடுத்துகிறது’ எனக் கூறி சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா, ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த மாதம் 23ம் தேதி தீர்ப்பளித்தார். இதனிடையே சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் மேல்முறையீடு செய்ய அவருக்கு சூரத் நீதிமன்றம் 30 நாள் அவகாசம் அளித்து ஜாமீன் வழங்கி இருந்தது. ராகுல் மேல்முறையீடு செய்து, தண்டனைக்கு ரத்து பெறாவிட்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி அவர் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும். இந்நிலையில், அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு செய்தார். இதற்காக ராகுல் சூரத் சென்றடைந்தார். அவருடன் பிரியங்கா காந்தி மற்றும் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய 3 மாநில முதல்வர்களும் ராகுலுடன் சென்றனர். மேல்முறையீட்டில், கீழ் நீதிமன்றத்தின் தண்டனைக்கு இடைக்கால தடை பெறப்பட்டால் மட்டுமே ராகுல் சிறை செல்வதை தடுக்க முடியும் என்பதால் இந்த வழக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே அவதூறு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்திக்கு ஏப்ரல் 13ம் தேதி வரை ஜாமீன் நீட்டிப்பு செய்ததுடன் அன்றைய தினமே மேல்முறையீட்டு வழக்கை சூரத் நீதிமன்றம் விசாரிக்கிறது.

மூலக்கதை