பப்புவா நியூ கினியா நாட்டில் 7.2 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... அலாஸ்காவிலும் நிலநடுக்கம் 6.5 ஆக பதிவு!!

தினகரன்  தினகரன்
பப்புவா நியூ கினியா நாட்டில் 7.2 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... அலாஸ்காவிலும் நிலநடுக்கம் 6.5 ஆக பதிவு!!

சிட்னி : பப்புவா நியூ கினியா நாட்டில் 7.2 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான பப்புவா நியூ கினியா நாட்டில் கடரோல நகரமான வெவாக்கிலிருந்து சுமார் 97 கி.மீ தொலைவில் 62 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 4 மணிக்கு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்  நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. இதனால் பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்டுள்ள சேத விவரம் குறித்தும் அறியப்படாமல் உள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது. சில லட்சம் மக்கள் வாழ்ந்து வரும் பப்புவா நியூ கினியா தீவு நாடு, நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ள பகுதியில் உள்ளது. இதனால் ஆண்டுக்கு 100க்கும் மேற்பட்ட நிலநடுக்கம் ஏற்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இதனிடையே அலாஸ்காவில் உள்ள ஆண்ட்ரியானோஃப் தீவுகளுக்கு 168 கிமீ தொலைவில் காலையில் 8.36 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கடியில் 105 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு நிலவரம் குறித்து தகவல் எதும் வெளியாகவில்லை.

மூலக்கதை