ஜிப்மர் மருத்துவமனையில் பரிசோதனைக்கு கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

தினகரன்  தினகரன்
ஜிப்மர் மருத்துவமனையில் பரிசோதனைக்கு கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் பரிசோதனைக்கு கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. ஜிப்மரில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மேம்பட்ட உடல் பரிசோதனைக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் வராத மற்றும் ஏழைகளுக்கான சிவப்பு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் தவிர மற்ற நோயாளிகளுக்கு பயன்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் தெரிவித்திருந்தார். புதுச்சேரியில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சிவப்பு ரேஷன் அட்டையும், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு மஞ்சள் ரேஷன் அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. எனவே இனி மஞ்சள் அட்டை வைத்திருப்பவர்களுக்கு உயர் சிகிச்சை பெற கட்டணம் வசூலிக்கப்படும். இம்மருத்துவமனையில் அளிக்கப்படும்  63 வகையான உயர் சிகிச்சைக்கு ரூ.500 முதல் ரூ.12,000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால்  இந்த மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்நிலையில் இந்த சிகிச்சை கட்டண முறையை ரத்து செய்ய கோரி புதுச்சேரி மாநில திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஜிப்மர் நுழைவு வாயில் முன்பு  எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திமுக எம்.எல்.ஏ. கென்னடி, செந்தில்குமார், சம்பத் மற்றும் கட்சி நிர்வாகிகள் என 500 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர். இதில் ஒன்றிய அரசுக்கு எதிராகவும், ஜிப்மருக்கு இயக்குனருக்கு எதிராகவும் கட்டண கோஷங்களை எழுப்பி வருகின்றனர். கட்டண சிகிச்சை முறையை ஜிப்மர் நிர்வாகம் திரும்ப பெறவில்லை என்றால் மிகபெரியளவில் போராட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சிவா தெரிவித்தார். 

மூலக்கதை