ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி!!

தினகரன்  தினகரன்
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி!!

ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. அயடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்து 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.நடப்பாண்டில் ஐபிஎல் தொடரின் 4வது போட்டியில் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. ஐதராபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 203 ரன்களை எடுத்தது.ராஜஸ்தான் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், கேப்டன் சஞ்சு சாம்சன் ஆகியோர் அரைசதம் விளாசி அசத்தினர். ஐதராபாத் அணி தரப்பில் ஃபசல்ஹக் பாரூக்கி, தமிழக வீரரான நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். உம்ரான் மாலிக் 1 விக்கெட்டை கைப்பற்றினார்.204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்தனர். அபிஷேக் சர்மா மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலே தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும் ஜேசன் ஹோல்டர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். இதன் மூலம் ராஜஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.

மூலக்கதை