கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு வந்த சுற்றுலா பஸ் கவிழ்ந்து மூதாட்டி, சிறுவன் பலி: 40 பேர் படுகாயம்

தினகரன்  தினகரன்
கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு வந்த சுற்றுலா பஸ் கவிழ்ந்து மூதாட்டி, சிறுவன் பலி: 40 பேர் படுகாயம்

ஒரத்தநாடு: கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த ஆம்னி பஸ் தஞ்சாவூர் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி, 9 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தனர். 40 பேர் படுகாயம் அடைந்தனர். கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு 51 பயணிகளுடன் நேற்றுமுன்தினம் இரவு ஆம்னி பஸ் சென்றது. பஸ்சை டிரைவர் சமீர் ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை 5.30 மணியளவில்   தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வழியாக ஒக்கநாடு கீழையூர் பகுதி சாலை வளைவில் பஸ் திரும்பியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறமாக இரும்பு தடுப்பில் மோதி கவிழ்ந்தது. பஸ்சில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி மரண ஓலமிட்டனர். இதில், திருச்சூர் அருகே நெல்லிக்குன்னத்தை சேர்ந்த லில்லி(55), கடைசி இருக்கையில் படுத்திருந்த ஜெரால்டு (9) ஆகிய 2 பேர் தலை நசுங்கி இறந்தனர். அப்பகுதியினரும், தீயணைப்பு படையினரும், போலீசாரும் வந்து பஸ் இடிபாட்டில் சிக்கி தவித்த 40 பேரை மீட்டு  தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி  மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து காரணமாக நேற்று காலை 5.30 மணியில் இருந்து 8.30 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மூலக்கதை