ஒன்றிய நிர்வாக தீர்ப்பாயத்தில் 1350 வழக்குகள் தேக்கம் எம்பிக்கள் குழு தகவல்

தினகரன்  தினகரன்
ஒன்றிய நிர்வாக தீர்ப்பாயத்தில் 1350 வழக்குகள் தேக்கம் எம்பிக்கள் குழு தகவல்

புதுடெல்லி: ஒன்றிய நிர்வாக தீர்ப்பாயத்தில் 1,350க்கும் மேற்பட்ட வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேங்கி உள்ளன என்றும் இந்த வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என நாடாளுமன்ற  எம்பிக்கள் குழு வலியுறுத்தியுள்ளது. ஒன்றிய  அரசு ஊழியர்களின் பணி சார்ந்த விவகாரங்கள் குறித்த வழக்குகளை  ஒன்றிய நிர்வாக தீர்ப்பாயம்(சிஏடி) விசாரித்து தீர்ப்பளிக்கிறது. இந்நிலையில்,  பணியாளர் நலன்,பொதுமக்கள் குறைகள் மற்றும் சட்டம்,நீதித்துறை தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில், கடந்த டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி நிர்வாக தீர்ப்பாயத்தின் பல்வேறு பெஞ்ச்களில் 80,545 வழக்குகள்  நிலுவையில் உள்ளன. இதில்,16,661 வழக்குகள் ஒரு வருடம் வரையும், 46,534 வழக்குகள் 5 ஆண்டுகள்,16,000 வழக்குகள்  10 ஆண்டுகள்,1,350 வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேங்கி உள்ளன. ஒன்றிய நிர்வாக தீர்ப்பாயத்தின் விதிகளின்படி  மனுக்களை 6 மாதத்தில் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என  தெரிவித்துள்ளது. இதில், பெரும்பாலான வழக்குகள் பென்ஷன் மற்றும் மூத்த குடிமக்கள் தொடர்பானவை.  எனவே,10 வருடங்களுக்கும் மேலான வழக்குகளை முன்னுரிமை அடிப்படையில் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும். வழக்குகள் தேக்கமடைவதற்கு போதுமான உறுப்பினர்கள் இல்லாததே காரணம். நிர்வாக தீர்ப்பாயத்தில் நீதிபதிகள்,நிர்வாக அதிகாரிகள் உட்பட 70 பதவிகள் உள்ளன. இதில்,17 இடங்கள் காலியாக உள்ளன என  கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை