வட மாநிலங்களில் பருவம் தவறிய மழையால் கோதுமை பயிர்கள் கடும் சேதம்

தினகரன்  தினகரன்
வட மாநிலங்களில் பருவம் தவறிய மழையால் கோதுமை பயிர்கள் கடும் சேதம்

புதுடெல்லி: பருவம் தவறிய மழை, ஆலங்கட்டி மழையால் வட மாநிலங்களில்  கோதுமை பயிர்களுக்கு   கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. உலகில் கோதுமை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்தாண்டு இந்தியாவில் மொத்தம் 3.4 கோடி ஹெக்டேரில் கோதுமை பயிரிடப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உபி உள்பட 3 மாநிலங்களில் மொத்தம் 5.23 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள  கோதுமை பயிர்கள் பருவம் தவறிய மழையால் சேதமடைந்துள்ளன.இது குறித்து ஒன்றிய வேளாண்துறை செயலாளர் மனோஜ் கூறுகையில்,‘‘ கோதுமை அறுவடைக்கு தயாராகி வருகிறது. ஆனால், கடந்த சில வாரங்களாக சில இடங்களில்  மழை, ஆலங்கட்டி மழை பெய்தது. மேலும் சூறைக்காற்றும் வீசியதால் கோதுமை விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காலம் தவறிய மழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்பு குறித்து மாநில அரசுகளுடன்  சேர்ந்து ஒன்றிய அரசு ஆய்வு நடத்தும்’’ என்றார். ராஜஸ்தானில், 3.88 லட்சம் ஹெக்டேர் கோதுமை பயிர்கள் சேதமடைந்துள்ளன.  மத்திய பிரதேசத்தில் ஒரு லட்சம் ஹெக்டேரும், உபியில் 35 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களும்  சேதமடைந்துள்ளன.   பஞ்சாப்பில்  கோதுமை பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்த அதிகாரிகளுக்கு முதல்வர் பகவந்த் சிங் மான் உத்தரவிட்டுள்ளார். அதே போல், பயிர் பாதிப்பு குறித்து ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும் என அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.

மூலக்கதை