ருதுராஜ் அதிரடி ஆட்டம்: சிஎஸ்கே 178 ரன் குவிப்பு

தினகரன்  தினகரன்
ருதுராஜ் அதிரடி ஆட்டம்: சிஎஸ்கே 178 ரன் குவிப்பு

அகமதாபாத்: ஐபிஎல் டி20 தொடரின் 16வது சீசன் தொடக்க லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 178 ரன் குவித்தது. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச முடிவு செய்தார். சென்னை அணி தொடக்க வீரர்களாக டிவோன் கான்வே, ருதுராஜ் கெயிக்வாட் களமிறங்கினர். கான்வே 1 ரன் மட்டுமே எடுத்து ஷமி வேகத்தில் கிளீன் போல்டாக, சிஎஸ்கே அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.அடுத்து ருதுராஜுடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 36 ரன் சேர்த்தனர். மொயீன் 23 ரன் (17 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), பென் ஸ்டோக்ஸ் 7 ரன் எடுத்து ரஷித் கான் சுழலில் அடுத்தடுத்து வெளியேற, சென்னை அணி 7.4 ஓவரில் 70 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து சற்றே திணறியது. ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், அதிரடியாக விளையாடிய ருதுராஜ் 23 பந்தில் அரை சதம் அடித்தார். அல்ஜாரி ஜோசப் வீசிய 9வது ஓவரில் அவர் 3 இமாலய சிக்சர்களை தூக்கி அசத்தினார்.அம்பாதி ராயுடு 12 ரன் எடுத்து ஜோஷ் லிட்டில் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ருதுராஜ் 92 ரன் (50 பந்து, 4 பவுண்டரி, 9 சிக்சர்) விளாசி ஜோசப் பந்துவீச்சில் ஷுப்மன் கில் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா 1 ரன் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். ஷிவம் துபே 19 ரன் எடுத்து ஷமி வேகத்தில் ரஷித் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன் குவித்தது. கேப்டன் தோனி 14 ரன் (7 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்), மிட்செல் சான்ட்னர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் பந்துவீச்சில் முகமது ஷமி, ரஷித் கான், அல்ஜாரி ஜோசப் தலா 2 விக்கெட், ஜோஷ் லிட்டில் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 20 ஓவரில் 179 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது.

மூலக்கதை