உபா சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்ட ‘பிஎப்ஐ’ மீதான தடையை தீர்ப்பாயம் உறுதி செய்தது

தினகரன்  தினகரன்
உபா சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்ட ‘பிஎப்ஐ’ மீதான தடையை தீர்ப்பாயம் உறுதி செய்தது

புதுடெல்லி: உபா சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்ட பிஎப்ஐ மீதான உள்துறை அமைச்சகம் விதித்த தடையை தீர்ப்பாயம் உறுதி செய்தது. கடந்தாண்டு செப்டம்பர் 28ம் தேதி, நாடு முழுவதும் செயல்பட்டு வந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எப்.ஐ) மற்றும் அதன் துணை அமைப்புகளை ஒன்றிய உள்துறை அமைச்சகம், உபா சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு தடை செய்தது. சட்டவிரோத நடவடிக்கைகளில் அந்த அமைப்பினர் ஈடுபட்டதாக எழுந்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் ெதாடர்ச்சியாக மேற்கண்ட அமைப்புகளை சேர்ந்த பலரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பிஎப்ஐ மீதான தடையை ஆராய நீதிபதி தினேஷ் குமார் சர்மா  தலைமையிலான தீர்ப்பாயம் கடந்த ஆண்டு அக்டோபரில் அமைக்கப்பட்டது. அந்த தீர்ப்பாயம், நாட்டின்  பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்த பிஎப்ஐ அமைப்பின் செயல்பாடுகள், அவர்களது தரப்பு வாதங்களை கேட்டறிந்தது. இந்த நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் பிறப்பிக்கப்பட்ட பிஎப்ஐ மீது தடையை தீர்ப்பாயம் உறுதி செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மூலக்கதை