நோபல் பரிசுக்கான போட்டியில் பிரதமர் மோடியின் பெயர் உள்ளதாக வெளியான செய்திக்கு நோபல் பரிசுக் குழுத் துணைத் தலைவர் திட்டவட்ட மறுப்பு!!

தினகரன்  தினகரன்
நோபல் பரிசுக்கான போட்டியில் பிரதமர் மோடியின் பெயர் உள்ளதாக வெளியான செய்திக்கு நோபல் பரிசுக் குழுத் துணைத் தலைவர் திட்டவட்ட மறுப்பு!!

டெல்லி : அமைதிக்கான நோபல் பரிசுப் போட்டியாளர்களில் பிரதமர் மோடியின் பெயர் உள்ளதாக வெளியான செய்தியை நோபல் பரிசுக் குழுத் துணைத் தலைவர் அஸ்லே டோஜே திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்தியா வந்துள்ள நோபல் பரிசுக் குழுத் துணைத் தலைவர் அஸ்லே டோஜே, பிரபல ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து இருந்தார். அந்த பேட்டி குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊடகவியலாளர், நோபல் பரிசுக்கான போட்டியில் பிரதமர் மோடி முக்கிய போட்டியாளராக உள்ளார் என்று அஸ்லே டோஜே தெரிவித்து இருந்ததாக குறிப்பிட்டு இருந்தார். அத்துடன் தாம் மோடியின் மிகப்பெரிய ரசிகர் என்று அஸ்லே டோஜே கூறியதாகவும் பதிவில் தெரிவித்து இருந்தார். ஆனால் இந்த தகவலை அஸ்லே டோஜே திட்டவட்டமாக மறுத்து உள்ளார். இது பொய்யான செய்தி என்றும் இது போன்ற செய்திக்கு நாம் கை, கால், மூக்கு வைக்கக் கூடாது என்றும் அஸ்லே டோஜே தெரிவித்துள்ளார். அஸ்லே டோஜே அளித்த பேட்டியில் உக்ரைன் விவகாரத்தில் மோடிக்கு எவ்வளவு மதிப்பெண்கள் கொடுப்பீர்கள் என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அஸ்லே டோஜே, மோடியின் நிலைப்பாட்டை பாராட்டி பேசி இருந்தார். உக்ரைன் விவகாரத்தில் மோடியை பற்றி நோபல் பரிசு தேர்வுக் குழு தலைவர் பாராட்டி பேசிய வார்த்தைகளை கொண்டு நோபல் பரிசு போட்டியாளர்களில் மோடி முதன்மையானவராக உள்ளார் என்று ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டு இருப்பதாக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.  

மூலக்கதை