பாக்., முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் துபாயில் காலமானார்

தினமலர்  தினமலர்
பாக்., முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் துபாயில் காலமானார்



இஸ்லாமாபாத்,-பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளரும், கார்கில் போருக்கு காரணகர்த்தாவுமான பர்வேஸ் முஷாரப், 79, துபாயில் நேற்று காலமானார்.

புதுடில்லியில், 1943 ஆக., 11ல் பிறந்தவர் பர்வேஸ் முஷாரப். இந்தியா - பாக்., பிரிவினைக்கு பின் அவரது குடும்பம் கராச்சிக்கு குடிபெயர்ந்தது.

பாக்.,கின் குவெட்டாவில் உள்ள ராணுவ கல்லுாரியில் படித்து, 1964ல் அந்நாட்டு ராணுவத்தில் சேர்ந்தார். கடந்த 1965, 1971ல் நடந்த இந்தியா - பாக்., போரில் இவர் பங்கேற்றுள்ளார். படிப்படியாக உயர்ந்து பாக்., ராணுவ தளபதியானார்.

ஒப்பந்தம்



நம் நாட்டு பிரதமராக வாஜ்பாய் பதவி வகித்த போது, இந்தியா - பாக்., இடையே வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதற்கு சில மாதங்களுக்கு பிறகு கார்கில் எல்லையில் இந்திய - பாக்., போர் மூண்டது. இந்த போருக்கு முக்கிய காரணமாக இருந்து, அதை வழிதடத்தியவர் பர்வேஸ் முஷாரப்.

போரில் பாக்., தோற்ற சில மாதங்களிலேயே, ராணுவ புரட்சி செய்து அப்போதைய பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் இடம் இருந்து ஆட்சியை கைப்பற்றினார். அதன் பின், 2008 வரை ஆட்சியில் இருந்தார்.

பாக்., எதிர்க்கட்சி தலைவர் பெனாசிர் புட்டோ, 2007ல் படுகொலை செய்யப்பட்ட பின் ஏற்பட்ட தேர்தல் தோல்வியால் முஷாரப் தனிமைபடுத்தப்பட்டார்.

அவர் பாக்., அதிபராக இருந்தபோது, அரசியலமைப்பை ரத்து செய்த விவகாரத்தில், அவர் தேர்தலில் போட்டியிட அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில், 'அமிலாய்டோசிஸ்' என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார்.

இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் உடலில், 'அமிலாய்ட்' எனப்படும், இயல்புக்கு மாறான புரதம் சுரக்க துவங்கி, திசுக்கள், உறுப்புகள் முழுதும் பரவி காலப்போக்கில் செயல் இழக்க செய்துவிடும். இது குணப்படுத்த முடியாத நோயாகவே உள்ளது.

இந்த நோய்க்கு சிகிச்சை பெற, உச்ச நீதிமன்ற அனுமதியுடன், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய்க்கு, 2016ல் முஷாரப் சென்றார். அதன் பின் அவர் பாக்., திரும்பவில்லை.

துபாயில் உள்ள அமெரிக்கன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சிறப்பு விமானம்



முஷாரப்பின் மறைவுக்கு பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உட்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். பாக்., ராணுவம் சார்பில் அதன் ஊடக பிரிவு இரங்கல் செய்தி வெளியிட்டது.

பர்வேஸ் முஷாரப்பின் உடலை பாகிஸ்தான் எடுத்து செல்ல தடையில்லா சான்று அளிக்கும்படி, துபாயில் உள்ள பாக்., துாதரகத்தில் முஷாரப் குடும்பத்தினர் நேற்று விண்ணப்பித்தனர்.

அதற்கு துாதரகம் அனுமதி அளித்தது. இதையடுத்து முஷாரப்பின் உடல் பாக்., எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அவரது உடலை எடுத்து வருவதற்காக, பாகிஸ்தானின் நுர் கான் விமான தளத்தில் இருந்து சிறப்பு விமானம் துபாய் செல்கிறது.

இஸ்லாமாபாத்,-பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளரும், கார்கில் போருக்கு காரணகர்த்தாவுமான பர்வேஸ் முஷாரப், 79, துபாயில் நேற்று காலமானார்.புதுடில்லியில், 1943 ஆக., 11ல் பிறந்தவர் பர்வேஸ்

மூலக்கதை