சாலையின் பெயர் வள்ளுவர் வழி

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
சாலையின் பெயர் வள்ளுவர் வழி

தமிழின் ஒப்பற்ற வாழ்வியல் நூல் திருக்குறள்.  திருக்குறள் தமிழர்களுக்கானது மட்டுமல்ல. இது உலக மாந்தர்கள் படித்துப் பின்பற்றி வாழ்வியலை மேம்படுத்திக்கொள்ளவேண்டிய ஒப்பற்ற  வாழ்வியல் நூல்.  விரைவில் யுனெஸ்கோவில் உலக நூலாக அங்கீகாரம் பெற தமிழ்ச்சமூகம் முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில், வள்ளுவர் வழியைப் பின்பற்றும் அமெரிக்கத் தமிழர்கள் அங்கு வள்ளுவர் வழி என்று ஒரு சாலைக்குப் பெயர்வைத்து பெருமை சேர்த்துள்ளார்கள்.   அமெரிக்கா அனைத்து மொழி, கலை , பண்பாட்டையும்  ஏற்றுக்கொள்ளும் நாடு.  பல இன மக்கள் தங்கள் அடையாளங்களை , பெருமைகளை உரிய சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி கொண்டாட மதிப்பளிக்கும் நாடு.     வாசிங்டன் டிசி அருகில் உள்ள வெர்ஜினியா மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கிறார்கள்.  குறிப்பாக இளையோர் அதிகம் வசிக்கும் மாநிலம்.  அங்குள்ள தமிழர்கள் ஒற்றுமையாக பல்வேறு முன்மாதிரி தமிழ் வளர்ச்சி செயல்திட்டங்களைத் தொடர்ந்து செய்துவருகிறார்கள். குறிப்பாக 2017ம் ஆண்டு அமெரிக்காவின் முதல் மாநிலமாகத் தமிழர் பண்டிகை பொங்கல் திருவிழாவிற்கு அங்கீகாரம் பெற்றார்கள். இதுகுறித்து வலைத்தமிழ் நேர்காணல் செய்து வெளியிட்ட காணொளி https://www.youtube.com/watch?v=N3Nto0CbbgA.   இன்றுவரை இதைப் பின்தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் முயற்சி மேற்கொண்டுள்ளன.     “எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்” என்பதற்கேற்ற அடுத்த முயற்சியாக வெர்ஜினியா மாகாணத்தில்  வள்ளுவர் வழி  (Valluvar Way)  என்று ஒரு தெருவிற்குப் பெயர் சூட்ட முயற்சி எடுத்து வெற்றியும் கண்டுள்ளார்கள். இது அனைவரும் பெருமைப்படத்தக்க நிகழ்வாகும்.  தமிழால் இணைந்து தமிழ் அடையாளம் காக்கும், தமிழுக்கு பெருமை சேர்க்கும் இதுபோன்ற  பல ஆக்கப்பூர்வமான தமிழ்ப் பணிகளை  வெர்ஜினியாவில் அமைந்துள்ள 700க்கும் மேற்பட்ட தமிழ்க்குழந்தைகள் பயிலும் வள்ளுவன் தமிழ்மையம் (https://www.valluvantamil.org/) என்ற தமிழ்ப்பள்ளி  தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து செய்துள்ளார்கள்.    மேலும் வெர்ஜினியா மாநிலம் 2022 ஆண்டு முதல் ஒவ்வொரு சனவரி மாதமும் “தமிழ் மரபுத் திங்கள்” கொண்டாட ஒப்புதல் அளித்துள்ளது.     தமிழர்கள் கரம் கோர்த்து ஒற்றுமையோடு செயல்பட்டால் நம்மால் முடியாதது இல்லை  என்பதற்கு இந்த செயல்கள் ஒரு முன்னுதாரணம் என்றால் மிகையாகாது.    இதற்குச் சிந்தித்த, உழைத்த வள்ளுவன் தமிழ் மையம் தன்னார்வலர்கள், சிரிஸ் சட்ட நிறுவனம் உள்ளிட்ட அனைவருக்கும் அமெரிக்கத் தமிழ்ச்சமூகம் மகிழ்ச்சியை , பாராட்டுகளைத் தெரிவித்துவருகிறது.        SRIS law firm and Valluvan Tamil Academy worked with VA State and county officials to pass Valluvar Way at Chantilly VA. It’s approved by VA Governor on April 11th 2022 and the sign board is implemented in Sep 2022.

மூலக்கதை