மக்களிடம் மாறிவரும் வாழ்க்கை முறை வரவர... கணவன் - மனைவி வாழ்க்கை போரடிச்சிபோச்சு! அமெரிக்காவில் ஒரே பாலின திருமணத்திற்கு 73% பேர் ஆதரவு

தினகரன்  தினகரன்
மக்களிடம் மாறிவரும் வாழ்க்கை முறை வரவர... கணவன்  மனைவி வாழ்க்கை போரடிச்சிபோச்சு! அமெரிக்காவில் ஒரே பாலின திருமணத்திற்கு 73% பேர் ஆதரவு

நியூயார்க்: அமெரிக்க மக்களிடையே நாளுக்கு நாள் ஒரே பாலின திருமணத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 73% சதவீதம் பேர் ஆதரவு அளித்ததாக ‘கேல்ப்’ நடத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண் - பெண் திருமண வாழ்க்கை முறையே அங்கீகரிக்கப்பட்ட கோட்பாடாக இருந்தாலும், ஆணோடு ஆணும், பெண்ணோடு பெண்ணும் சேர்ந்து வாழும் திருமண உறவுமுறை பல நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் ஒரே பாலின திருமணம் அல்லது ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கு கடந்த 2004ம் ஆண்டு முறையான சட்ட அனுமதி அளிக்கப்பட்டது. முன்னதாக, நாட்டிலேயே முதன்முதலாக மாசாச்சூசெட்ஸ் மாகாணத்தில் மட்டும் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மேலும் சில மாநிலங்களில் சட்ட அங்கீகாரம் விரிவுபடுத்தப்பட்டது. எனினும், அமெரிக்காவில் உள்ள 14 மாகாணங்களில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை எதிர்த்து ஓரினச் சேர்க்கை பிரியர்கள் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ‘ஒரே நாடு - ஒரே சட்டம்’ என்ற அமெரிக்க அரசியலமைப்பு சட்ட கோட்பாட்டை இந்த தடை கேள்விக்குறியாக்கியது. இந்த வழக்கை விசாரித்து வந்த அந்நாட்டு உச்சநீதிமன்றம், நாடு முழுவதும் வாழும் ஓரினச் சேர்க்கையாளர்கள் இனி திருமணம் செய்து கொண்டு சட்ட அங்கீகாரத்துடன் தம்பதியராக வாழலாம் என்றும், இதற்கு எவ்வித தடையும் இல்லை என்று 2015ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி அமெரிக்க உச்சநீதிமன்றம் ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது. இந்நிலையில், ‘கேலப்’என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் ஒரே பாலின திருமணத்திற்கான ஆதரவு பலமடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 1996ம் ஆண்டில் இந்த அமைப்பு ஆய்வை தொடங்கிய போது ஒரே பாலின திருமணத்தை 27 சதவீதம் பேர் மட்டுமே ஆதரித்தனர். 2015ல் அமெரிக்க உச்ச நீதிமன்றம், ஒரே பாலின திருமணங்களை அங்கீகரித்ததால், அதற்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இந்த ஆதரவை அளிப்பவர்களில் குடியரசுக் கட்சியினர் 55 சதவீதம் பேர் இருந்தனர். ஆனால், இப்போது ஜனநாயகக் கட்சியை சேர்ந்த 83 சதவீதம் பேர் ஒரே பாலின திருமணத்தை ஆதரிக்கின்றனர். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, ​​ஜனநாயகக் கட்சியினர் ஓரின சேர்க்கை மற்றும் லெஸ்பியன் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 2017 முதல் 2020ம் ஆண்டுவரை நடத்தப்பட்ட ஆய்வில் 68 சதவீதம் முதல் 71 சதவீதம் என்பதில் இருந்து, தற்போது 73 சதவீதமாக ஆதரவு அதிகரித்துள்ளது. ஒரே பாலின திருமணத்தை 84 சதவீத இளைஞர்களும், 72% நடுத்தர வயதுடையவர்களும், 60% வயதானவர்களும் விரும்புகின்றனர். இந்த ஆய்வின் முடிவுகளின்படி பார்த்தால், அமெரிக்க மக்களிடையே ஒரே பாலின திருமணத்திற்கான வாழ்க்கை முறையில் நம்பிக்கை, ஆதரவு அதிகரித்துள்ளதை காட்டுவதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் என்ன நிலைமை? பல நாடுகளில் ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரித்துள்ள நிலையில், இந்தியாவிலும் அதற்கான கோரிக்கை ஆங்காங்கே சிலர் எழுப்பி வருகின்றனர். கூடவே, எதிர்ப்புகளும் வருகிறது. இந்நிலையில், ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிக்கக் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், மேலும் நான்கு பேர், டில்லி உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கை தொடர்ந்து உள்ளனர். இவ்வழக்கில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘திருமணம் என்பது இரண்டு தனி நபர்களுக்கு இடையே, அவர்களது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. ஆனால், அதை தனிநபர் சுதந்திரம் என்ற வரையறைக்குள் கொண்டு வர முடியாது.ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் சேர்ந்து வாழ்ந்தாலும், உடல் ரீதியிலான உறவு கொண்டாலும், அதனை இந்திய குடும்ப முறையுடன் ஒப்பிட முடியாது. ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிப்பது, ஏற்கனவே உள்ள சட்டங்களை மீறுவதாக அமைந்து விடும். ஒரே பாலினத் திருமணம் என்பதற்கான வாய்ப்பு இல்லை. அதில் யார் கணவர், யார் மனைவி என்பதை எப்படி நிர்ணயிப்பது? ஒரே பாலினத் திருமணத்தை அனுமதித்தால், நாட்டில் மிகப் பெரும் குழப்பம் ஏற்படும். அதனால், ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை