8 கோடி தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு அளிக்கும் அமெரிக்கா

தினமலர்  தினமலர்
8 கோடி தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு அளிக்கும் அமெரிக்கா

வாஷிங்டன்: தங்கள் வசம் உள்ள 8 கோடி கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா பரவல் படிப்படியாக கட்டுக்குள் வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 25 ஆயிரம் பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 369 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதால், சுமார் 46 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதால், பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது. இதற்கிடையே, உலக நாடுகளிடம் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது. தடுப்பூசி கொள்முதல் செய்வதில் பெரும் வேறுபாடு உள்ளது.

வளர்ந்த, வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது தேவைக்கு அதிகமாகத் தடுப்பூசிகளை வாங்கி வைத்துள்ளன. ஏழை நாடுகளோ தடுப்பூசி கிடைக்காமல் திணறி வருகின்றன. இந்நிலையில், தங்கள் வசம் உள்ள 8 கோடி தடுப்பூசிகளை, மற்ற உலக நாடுகளுக்கு வழங்க இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‛வெளிநாடுகளில் புதிய உருமாறிய வைரஸ் பாதிப்புகள் நிகழக்கூடும். இதனால், அமெரிக்காவிலும் ஆபத்தை ஏற்படலாம். எனவே உலகெங்கிலும் கொரோனாவை எதிர்த்து போராட உதவ வேண்டும். எங்கள் வசம் உள்ள 8 கோடி கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க இருக்கிறோம். இது அடுத்த 6 வாரங்களில் மற்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்,' என்றார்.

மூலக்கதை