பில்கேட்ஸ் - மிலிண்டா விவாகரத்து 27 ஆண்டு திருமண வாழ்வு கசந்தது

தினமலர்  தினமலர்
பில்கேட்ஸ்  மிலிண்டா விவாகரத்து 27 ஆண்டு திருமண வாழ்வு கசந்தது

நியூயார்க்:உலகின் மிகப் பெரும் கோடீஸ்வரர்களான, பில்கேட்ஸ் - மிலிண்டா தம்பதி, விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த பில்கேட்ஸ், 65, மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நண்பர்களுடன் நிறுவி, சில ஆண்டுகளுக்கு முன்வரை, உலகின், 'நம்பர் ஒன்' பணக்காரராக திகழ்ந்தார். தற்போது, 9 லட்சத்து, 30 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், உலகின் நான்காவது பெருங்கோடீஸ்வரராக விளங்குகிறார்.தன் நிறுவனத்தில் பணியாற்றிய, மிலிண்டாவை காதலித்து, 1994ல் மணந்து கொண்ட பில்கேட்சுக்கு, மூன்று குழந்தைகள் உள்ளனர்.

பில்கேட்சும், மிலிண்டாவும் இணைந்து, 'பில் அண்டு மெலிந்தா அறக்கட்டளை' என்ற தொண்டு அமைப்பை நிறுவி, உலகெங்கிலும் உள்ள ஏழைக் குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக நிதியுதவி செய்து வருகின்றனர். மூன்று லட்சத்து, 75 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள இந்த அறக்கட்டளை, பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு, கொரோனா தடுப்பூசியை இலவசமாக சப்ளை செய்கிறது. இல்லறத்திலும், பொது வாழ்க்கையிலும் இணைந்து செயல்பட்டு வந்த பில்கேட்ஸ் தம்பதி, தற்போது விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இது குறித்து, பில்கேட்ஸ் - மிலிண்டா இணைந்து, 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ள அறிக்கை: இருவரும் நீண்ட காலம் யோசித்து, எங்கள் மண வாழ்க்கையை முறித்துக் கொள்வது என, முடிவெடுத்துள்ளோம்.அதேசமயம், அறக்கட்டளை பணிகள் தொடரும். அதில் இருவரும் இணைந்து பணியாற்றுவோம்.புதிய வாழ்க்கையில் பயணிக்க துவங்கும் எங்கள் குடும்பத்திற்கு தனிமை தேவைப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக, பில்கேட்ஸ் தம்பதி இடையே, கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.பலமுறை இருவரும் விவாகரத்து செய்ய திட்டமிட்டு, முடிவை தள்ளி வைத்து வந்ததாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

மூலக்கதை