டோங்கோ எரிமலை வெடிப்பு; 100 ஹிரோஷிமா குண்டுவெடிப்புக்கு சமம்: நாசா விஞ்ஞானிகள் தகவல்

தினகரன்  தினகரன்
டோங்கோ எரிமலை வெடிப்பு; 100 ஹிரோஷிமா குண்டுவெடிப்புக்கு சமம்: நாசா விஞ்ஞானிகள் தகவல்

நுகுஅலோபா: ‘டோங்கா தீவில் கடலுக்கடியில் எரிமலை வெடித்ததால் வெளிப்பட்ட ஆற்றலானது ஹிரோஷிமா குண்டுவெடிப்பை காட்டிலும் 100 மடங்கு சக்திவாய்ந்தது’ என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். டோங்கா தீவுக்கு அருகே கடற்பகுதியில் ஹங்கா டோங்கா -ஹங்கா ஹபாய் எரிமலை கடந்த 15ம் தேதி வெடித்து சிதறியது. இதன் காரணமாக சுமார் 40 கி.மீ. உயரத்துக்கு எரிமலை குழம்புகள் தூக்கி வீசப்பட்டன. டோங்கா எரிமலை வெடித்ததால் சுனாமி ஏற்பட்டது. இந்த சுனாமியினால் அருகில் இருந்த தீவுகள் கடுமையாக சேதடைந்துள்ளன. இந்த எரிமலை வெடிப்பினால்  நச்சு சாம்பல் உமிழப்பட்டது. குடிநீர் விஷதன்மை நிறைந்ததாக மாறியது. மேலும் பயிர்கள் முற்றிலும் நாசமடைந்தன. மொத்தத்தில் எரிமலை வெடித்து சிதறியதால் 2 கிராமங்கள் அழிந்து தரைமட்டமானது. மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் டோங்கா எரிமலை வெடிப்பை நாசா விஞ்ஞானிகள் ஹிரோஷிமா குண்டுவெடிப்பு சம்பவத்தோடு ஒப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக நாசா புவி கண்காணிப்பகம் கூறுகையில், ‘எரிமலை வெடித்ததால் வெளிப்பட்ட ஆற்றலானது கடந்த 1945ம் ஆண்டு ஜப்பானின் ஹிரோஷிமா நகரின் மீது அமெரிக்கா வீசிய குண்டைக்காட்டிலும்  100 மடங்கு வலிமை வாய்ந்ததாகும்’ என்று தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், ‘எரிமலை வெடிப்பால் படர்ந்துள்ள சாம்பல் படலம் உடல்நலப்பிரச்னைகளை உருவாக்குகிறது. கண்களில் எரிச்சல் ஏற்படுகின்றது. விரல் நகங்கள் கருப்பாகி உள்ளன’ என தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை