டென்னிஸ் வீரர், நடிகைகள் திரிணாமுல்லில் இணைவு; பாஜகவின் கருப்பு கொடிக்கு ‘நமஸ்தே’ கூறிய மம்தா: கோவா கூட்டத்தில் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
டென்னிஸ் வீரர், நடிகைகள் திரிணாமுல்லில் இணைவு; பாஜகவின் கருப்பு கொடிக்கு ‘நமஸ்தே’ கூறிய மம்தா: கோவா கூட்டத்தில் பரபரப்பு

பனாஜி: கோவா சென்ற மம்தாவுக்கு பாஜகவினர் கருப்பு கொடி காட்டியதற்கு மம்தா பானர்ஜி ‘நமஸ்தே’ கூறினார். முன்னதாக டென்னிஸ் வீரர், பாலிவுட் நடிகைகள் சிலர் திரிணாமுல் கட்சியில் இணைந்தனர்.

கோவா மாநிலத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மூன்று நாள் பயணமாக கோவா சென்றுள்ளார்.

பனாஜியில் அவர் பேசுகையில், ‘பாஜகவை எதிர்த்துப் போராட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

மேற்குவங்கத்தில் அவர்களை வீழ்த்திய நாங்கள் தற்போது கோவாவில் களத்தில் இறங்கியுள்ளோம்.

பாஜகவை எதிர்த்து போராடவில்லை என்றால், அவர்கள் நாட்டை முடித்துவிடுவார்கள். நாட்டையே விற்றுவிடுவார்கள்.

நேற்று நான் கோவா வந்தபோது, அவர்கள் எனக்கு எதிராக கருப்புக் கொடிகளைக் காட்டினர்; ஆனால் நான் அவர்களுக்கு ‘நமஸ்தே’ என்று கூறினேன். நான் ஒரு இந்தியர் என்பதால், நாட்டின் எந்த பகுதிக்கும் சென்றுவர முடியும்.

மேற்குவங்கம் மட்டும் என் தாய்நாடு அல்ல; ஒட்டுமொத்த இந்தியாவும் என்னுடைய தாய்நாடு.

மேற்குவங்கம் மிகவும் வலுவான மாநிலம்.

கோவாவையும் அதேபோல் வலுவான மாநிலமாக பார்க்க விரும்புகிறோம். கோவாவில் புதிய விடியலைப் பார்க்க விரும்புகிறோம்.

அதிகாரத்தைக் கைப்பற்ற இங்கு நான் வரவில்லை. மக்கள் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு உதவ வந்துள்ளேன்.

மேற்குவங்கத்தில் இருக்கும் மம்தா, கோவா பிரச்னைகளை எப்படி தீர்ப்பார்? என்று கேட்கின்றனர். ஏன் கூடாது? நான் ஒரு இந்தியன்; எங்கு வேண்டுமானாலும் சென்று பணியாற்ற முடியும்.

மதச்சார்பின்மையை நம்புகிறேன்.

நாட்டின் ஒற்றுமையை நம்புகிறேன்.

பாஜக சாதி அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தி வைத்திருக்கிறது. பாஜக மக்களின் மனதில் விஷத்தை நிரப்புகிறது’ என்றார்.

முன்னதாக டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், பாலிவுட் நடிகைகள் நபிஷா அலி, மிர்னாலினி தேஷ்பிரபு ஆகியோர் மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

.

மூலக்கதை