திரையுலக சாதனைகளை பாராட்டி நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது: தனுஷுக்கு தேசிய விருது; துணை ஜனாதிபதி வழங்கினார்.!

தமிழ் முரசு  தமிழ் முரசு
திரையுலக சாதனைகளை பாராட்டி நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது: தனுஷுக்கு தேசிய விருது; துணை ஜனாதிபதி வழங்கினார்.!

புதுடெல்லி: திரையுலக சாதனைகளை பாராட்டி நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருதை துணை ஜனாதிபதி வெங்கைய்ய நாயுடு இன்று வழங்கினார். இந்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2019ம் ஆண்டுக்கான 67வது தேசிய திரைப்பட விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் மொத்தம் 7 விருதுகளை தமிழ் திரையுலகம் வென்றுள்ளது.

இதற்கான விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் பகல் 11 மணிக்கு நடைபெற்றது. சிறந்த தமிழ் படமாக வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த நடிகருக்கான விருது அசுரன் படத்தில் நடித்த தனுஷ், சிறந்த துணை நடிகருக்கான விருது சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த விஜய் சேதுபதி, சிறந்த இசை அமைப்பாளருக்கான விருது விஸ்வாசம் படத்துக்காக டி. இமான், சிறப்பு திரைப்படத்துக்கான விருது பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7, சிறந்த ஒலிக்கலவைக்கான விருது ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்காக ரசூல் பூக்குட்டி, சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது  கருப்புதுரை படத்தில் நடித்த நாகவிஷாலுக்கு வழங்கப்பட்டது.

இதே விழாவில், திரையுலகில் பல்வேறு சாதனைகள் படைத்த நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருதை துணை ஜனாதிபதி வெங்கைய்ய நாயுடு வழங்கினார்.

மற்றும் பல்வேறு மொழிகளில் தேர்வு செய்யப்பட்ட நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர், இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா தனுஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விருது பெறுவது குறித்து விஜய் சேதுபதி கூறும்போது, ‘தமிழ் சினிமாவிலிருந்து நிறைய பேர் விருது பெறுவது பெருமையாக உள்ளது. திறமையான கலைஞர்கள் பலருக்கும் இந்த விருது கிடைப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் எதிர்பாராத வேடம் எனக்கு கிடைத்தது. இதற்காக இயக்குனருக்கு நன்றி’ என்றார்.

விருது பெற்றவர்கள் விவரம்: சிறந்த தமிழ் படம் - அசுரன். சிறந்த நடிகர் - தனுஷ் (அசுரன்).



சிறந்த நடிகர் - மனோஜ் பாஜ்பாய் (போன்ஸ்லே, இந்தி). சிறந்த நடிகை - கங்கனா ரணாவத் (பங்கா, மணிகர்னிகா).

சிறந்த இயக்குனர் - சஞ்சய் பூரண் சிங் சவுகான் (பாத்தர் ஹூரைன் - இந்தி). சிறந்த படம் - மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம் (மலையாளம்).

சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் - விக்ரம் மோர்(கன்னடம்). சிறந்த நடன அமைப்பாளர் - ராஜு சுந்தரம் (மகாராசி, தெலுங்கு).

சிறந்த இசையமைப்பாளர் - டி. இமான் (விஸ்வாசம்). சிறந்த துணை நடிகர் - விஜய் சேதுபதி (சூப்பர் டீலக்ஸ்).

சிறந்த துணை நடிகை - பல்லவி ஜோசி (தி தாஸ்கென்ட் பைல்ஸ், இந்தி). சிறந்த குழந்தை நட்சத்திரம் - நாகா விஷால் (கே. டி.

எனும் கருப்புதுரை). சிறந்த வசனகர்த்தா - விவேக் ரஞ்சன் அக்னிகோத்ரி.

சிறந்த ஒளிப்பதிவு - கிரிஷ் கங்காதரன் (ஜல்லிக்கட்டு, மலையாளம்). சிறந்த ஒலிக்கலவை - ரசூல் பூக்குட்டி (ஒத்த செருப்பு).

சிறந்த அறிமுக இயக்குனர் - மதுக்குட்டி சேவியர் (ஹெலன், மலையாளம்). சிறந்த குழந்தைகள் படம் - கஸ்தூரி (இந்தி).

சிறந்த படத்தொகுப்பு - நவீன் நூலி(ஜெர்சி, தெலுங்கு). சிறந்த பாடகர் - பி. பராக்(கேசரி, இந்தி).

சிறந்த பாடகி - சவானி ரவீந்திரா (பார்டோ, மராத்தி).

சிறப்பு பிரிவு, ஜூரி விருது - ஒத்த செருப்பு (தமிழ்).

.

மூலக்கதை