டெல்லியில் காங். செயற்குழு கூடியது: ராகுல் புதிய தலைவர் ஆவாரா?: சோனியா தலைமையில் மூத்த தலைவர்கள் ஆலோசனை: உ.பி., பஞ்சாப் உள்பட 5 மாநில தேர்தலை சந்திப்பது குறித்து வியூகம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெல்லியில் காங். செயற்குழு கூடியது: ராகுல் புதிய தலைவர் ஆவாரா?: சோனியா தலைமையில் மூத்த தலைவர்கள் ஆலோசனை: உ.பி., பஞ்சாப் உள்பட 5 மாநில தேர்தலை சந்திப்பது குறித்து வியூகம்

புதுடெல்லி: காங்கிரஸ் புதிய தலைவர் தேர்வு, உள்கட்சி விவகாரங்கள், 5 மாநில தேர்தல் குறித்து சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் இன்று காங்கிரஸ் செயற்குழுக் கூடி ஆலோசனை நடத்தியது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்ட  ராகுல் காந்தி, 2019 மே 25ம் தேதி கட்சியின் தலைவர் பதவியில் இருந்து  விலகினார்.

ராகுல் காந்தி தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று  காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து  நிர்பந்தம் செய்தனர். அவர் மறுத்து வந்ததால் சோனியா காந்தியே மீண்டும்  இடைக்காலத் தலைவரானார்.

இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில், காங்கிரஸ்  கட்சிக்கு முழுநேர தலைவர் நியமனம் செய்யப்படாமல் உள்ளது.

நேரு  குடும்பத்துக்கு வெளியேயிருந்து ஒருவர் காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்று  ராகுல் காந்தி பலமுறை தெரிவித்துவிட்டார்.

ஆனால், புதிய தலைவரை தேர்வு  செய்வதில் இழுபறி நீடித்தது. பஞ்சாப், சட்டீஸ்கர், ராஜஸ்தானில்  காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருக்கும் மாநிலங்கள்.

ஆனால், அந்த மாநிலங்களில் உட்கட்சி பூசலால் பிரச்னைககள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன். அதன் ெதாடர்ச்சியாக பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்கின் ராஜினாமாவும், புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி நியமனமும் நடந்தது.

சட்டீஸ்கரில் முதல்வர் பூபேஸ் பாகல், ராஜஸ்தானில் அசோக் கெலாட்டுக்கு எதிராக எதிர்கோஷ்டிகள் மோதலை உருவாக்கி வருகின்றன. நடந்து முடிந்த  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகள் ஒரு மாற்று  எதிரணியை உருவாக்குவது குறித்து விவாதித்தன.

அதற்கு முனைப்புக்  காட்டியது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும்தான்.

காங்கிரஸின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள அக்கட்சித் தலைவர்கள் 23 பேர் கட்சி விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க செயற்குழுக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல், கட்சியை சேர்ந்தவர்கள் வேறு கட்சிகளில் இணைவது போன்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்க அந்தக் கூட்டத்தைக் கூட்டுமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதிருப்தி தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் அண்மையில் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில், கட்சி சார்ந்த ஆலோசனைகளை ஏற்க வேண்டும் எனவும், அவற்றை ஒடுக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் இன்று, கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ப. சிதம்பரம், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஏ. கே. அந்தோணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கட்சிக்கு முழு நேரத் தலைவரை தேர்வு செய்தல், அமைப்பு தேர்தலை நடத்துதல், அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா உள்ளிட்ட 5 மாநில தேர்தல், ஒன்றிய பாஜக அரசை அரசியல் ரீதியாக வீழ்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதுகுறித்து மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘ராகுல்காந்தியே மீண்டும் தலைவராக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் பிரியங்கா காந்தியின் போராட்டம் அனைவரது கவனத்தை ஈர்த்தது. அதனால், பிரியங்கா காந்தியை தலைவராக தேர்வு செய்ய சில தலைவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

வரும் 5 மாநில தேர்தலை எதிர்கொள்வது பற்றியும், உட்கட்சி அமைப்பு தேர்தல் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

புதிய தலைவர் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்’ என்றனர்.

.

மூலக்கதை