‘ரெப்போ’ வட்டியில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘ரெப்போ’ வட்டியில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்

புதுடெல்லி: வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 8வது முறையாக எவ்வித மாற்றமுமின்றி 4 சதவீதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறினார். இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று நிருபர்களிடம் கூறுகையில், ‘வங்கிகளுக்கான கடன் வட்டியான ரெப்போ வட்டி விகிதம் 8வது முறையாக எவ்வித மாற்றமுமின்றி 4 சதவீதமாக தொடரும்.

ரெப்போவுக்கான தலைகீழ் வட்டி விகிதமும் 3. 35 சதவீதமாக தொடரும். வரும் 2022ம் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 9. 5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாத காரணத்தால், வங்கிகளின் பங்குகளில் அதிகளவிலான முதலீடுகள் குவிந்து வருகிறது.

2022ம் நிதியாண்டின் பணவீக்க விகிதம் 5. 3 சதவீதமாக இருக்கும்.

நாட்டில் பணவீக்க விகிதம் அதிகரித்ததை அடுத்து முக்கிய வட்டி விகிதங்களை மாற்ற வேண்டாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் வெங்காயத்தின் விலை உயர்வு குறித்து ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் பணிகளை முன்னெடுத்து வருகிறோம். இந்திய பொருளாதாரம் சிறந்த நிலையில் நிலைப்புதன்மையுடன் உள்ளது’என்றார்.

சமீபத்தில் ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனம் வெளியிட்ட கணிப்பின்படி, ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், எரிபொருள் விலைகள் அதிகரித்து வருவதால் அடுத்தாண்டு ஏப்ரல்-ஜூன் மாதங்களில் ரெப்போ வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி உயர்த்தும் என்று குறிப்பிட்டு இருந்தது.

.

மூலக்கதை