அணு ஆயுதங்களை தடை செய்ய ஒப்பந்தம் உலக நாடுகளுக்கு நாகசாகி வலியுறுத்தல்

தினமலர்  தினமலர்
அணு ஆயுதங்களை தடை செய்ய ஒப்பந்தம் உலக நாடுகளுக்கு நாகசாகி வலியுறுத்தல்

டோக்கியோ; ஜப்பானின் நாகசாகியில், அணுகுண்டு வீசப்பட்டதன், 75வது ஆண்டு தினம், நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற, மேயர் தோமிஹிசா தாவுவே, அணு ஆயுதங்களுக்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட, உலக நாடுகளை வலியுறுத்தினார்.

இரண்டாம் உலகப்போரின்போது, கிழக்காசிய நாடான ஜப்பானின் ஹிரோஷிமா மீது, 1945 ஆகஸ்ட், 6ம் தேதி, அணுகுண்டு ஒன்றை அமெரிக்கா வீசியது. இதில், 1.40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, அதே மாதம், 9ம் தேதி, நாகசாகி மீது, மற்றொரு அணுகுண்டு வீசப்பட்டது. அமெரிக்க விமானப் படையின், 'பி - 29 பாம்பர் பாக்ஸ்கர்' என்ற போர் விமானம் மூலம், காலை, 11:02 மணிக்கு, நாகசாகி மீது, 4,000 கிலோ எடையிலான அணுகுண்டு வீசப்பட்டது. மூன்று நாள் இடைவெளிக்குப் பின் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் உயிர் பிழைத்தோரும், அணுகுண்டு கதிர்வீச்சால், புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், நாகசாகியில், அணுகுண்டு வீசப்பட்டதன், 75வது ஆண்டு தினம், நேற்று அனுசரிக்கப்பட்டது.நாகசாகி அமைதி பூங்காவில் நடைபெற்ற இந்த நினைவு தின கூட்டத்தில், காலை, 11:02 மணிக்கு, அங்கு திரண்டிருந்த மக்கள், மவுன அஞ்சலி செலுத்தினர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே, இதில் பங்கேற்றனர்.அப்போது நாகசாகி மேயர், தோமிஹிசா தாவுவே கூறியதாவது:அணு ஆயுதங்களை ஒழிக்க, பெரும்பாலான உலக நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

ஆகையால், அணு ஆயுதங்களை தடை செய்யும் ஒப்பந்தத்தில், ஜப்பான் உள்ளிட்ட அனைத்து சர்வதேச நாடுகளும், உடனடியாக கையெழுத்திடவேண்டும். அணு ஆயுத அச்சுறுத்தல்கள், முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு, அதிகரித்து வருகிறது. ஆகையால், உலக நாடுகள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை