இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றார்

தினமலர்  தினமலர்
இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றார்

கொழும்பு; பார்லிமென்ட் தேர்தலில் அபார வெற்றி பெற்றதை அடுத்து, இலங்கையின் பிரதமராக நான்காவது முறையாக மகிந்த ராஜபக்சே, 74, நேற்று பதவியேற்றார்.

அவரது சகோதரரும், அதிபருமான கோத்தபயா ராஜபக்சே, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நம் அண்டை நாடான இலங்கையில், சமீபத்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், மகிந்த ராஜபக்சேவின் இலங்கை மக்கள் கட்சி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து, கொழும்பு புறநகர் பகுதியான கெலனியாவில் உள்ள, பழமையான ராஜமஹா விஹாரயா புத்த கோவிலில், நேற்று பதவியேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கை அரசியலுக்கும் கெலனியா புத்த கோவிலுக்கும், நெருங்கிய தொடர்புள்ளது. இந்த கோவிலில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்போர், மிக உயர்ந்த செல்வாக்கு உடைய நபர்களாக உருவாகுவர் என நம்பப்படுகிறது.

இதன்படி, காலை, 9:28க்கு, நல்ல நேரம் பார்த்து, இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றார். அவரது இளைய சகோதரரும், அதிபருமான கோத்தபயா ராஜபக்சே, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இலங்கை பிரதமராக, மகிந்த பதவியேற்பது, இது நான்காவது முறை; ஏற்கனவே, மூன்று முறை அவர் பிரதமராக பதவி வகித்துள்ளார்; இரண்டு முறை அதிபராகவும் பதவி வகித்துள்ளார். மகிந்த, அரசியலுக்கு வந்து, 50 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. தற்போது அவர் பிரதமராக பதவியேற்றுள்ளதால், இலங்கையின் ஒட்டு மொத்த அதிகாரமும், ராஜபக்சே குடும்பத்தினரிடம் வந்து உள்ளது. இலங்கையில், அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் அரசியல் அமைப்பு சட்டம், ஏற்கனவே அமலில் உள்ளது. கோத்தபயா ராஜபக்சே, இதை விரும்பில்லை.

அதிபரின் அதிகாரத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், இந்த சட்டத்தில் திருத்தம் செய்து, குறிப்பிட்ட பிரிவை ரத்து செய்வதற்கு, அவருக்கு, பார்லிமென்டில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்பட்டது. 'தற்போது அந்த பெரும்பான்மை கிடைத்துள்ளதால், அந்த சட்டத்தில் திருத்தம் செய்து, அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் சட்டப் பிரிவை ரத்து செய்யும் நடவடிக்கையில், ராஜபக்சே சகோதரர்கள் தீவிரம் காட்டுவர்' என, இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

மூலக்கதை