சீனாவில் பரவும் புதிய நோய் தொற்று

தினமலர்  தினமலர்

பீஜிங்: சீனாவில், 'கொரோனா' வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள சீனாவில், தற்போது புதிய நோய் தொற்று பரவத் துவங்கியுள்ளது. இதனால், 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் முதலில் பரவத் துவங்கிய அண்டை நாடான சீனாவில், 4,634 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும், அரசின் நடவடிக்கைகள் மூலம், வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.நாட்டில், கொரோனா அச்சுறுத்தல் இல்லாமல் இருந்த நிலையில், ஒரு புதிய நோய் தொற்று ஒன்று பரவத் துவங்கியுள்ளது. எஸ்.எப்.டி.எஸ்., என்ற வைரசால் ஏற்படும் இந்த நோயால், சீனாவில் இதுவரை, 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், நாட்டு மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கிழக்கு சீனாவில் அமைந்துள்ள ஜியாங்சு மாகாணத்தில், 37 பேர், இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அடுத்து, அன்ஹூய் மாகாணத்தில், 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் கிடைத்துள்ளன. உயிரிழந்த ஏழு பேரும், இவ்விரு மாகாணங்களைச் சேர்ந்தோர் என தெரியவந்துள்ளது. எஸ்.எப்.டி.எஸ்., புதிய வைரஸ் இல்லை என்றும், இந்த தொற்று பரவலை, கடந்த, 2011ம் ஆண்டு, சீனா கட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நோய் தொற்று, உண்ணி என்ற பூச்சிகள் மூலம் மனிதர்களை பாதிக்கும் என எச்சரித்துள்ள நோய்க் கிருமி நிபுணர்கள், சளி, ரத்தம் போன்றவற்றின் மூலம், ஒரு மனிதரிடம் இருந்து, மற்றொருவருக்கு எளிதில் பரவும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை