இரண்டு மாத ஆராய்ச்சிக்கு பின் பூமி திரும்பும் விண்வெளி வீரர்கள்

தினமலர்  தினமலர்
இரண்டு மாத ஆராய்ச்சிக்கு பின் பூமி திரும்பும் விண்வெளி வீரர்கள்

கேப் கனாவெரல்; 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின், 'க்ரூ டிராகன்' விண்கலம் மூலம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு, நாசா அனுப்பிய இரண்டு விண்வெளி வீரர்களும், இரண்டு மாத ஆராய்ச்சிக்கு பின், இன்று அதிகாலை பூமிக்கு திரும்புகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காக, க்ரு டிராகன் விண்கலத்துடன் கூடிய, 'பால்கன் - 9' ரக ராக்கெட்டை தயாரித்தது.கடந்த மே, 31ம் தேதி, புளோரிடாவில் உள்ள கென்னடி ஏவுதளத்தில் இருந்து, இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.அதில், நாசா விண்வெளி வீரர்களான, பாப் பென்கென் மற்றும் டக் ஹர்லியும், அனுப்பி வைக்கப்பட்டனர். சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்த, அவ்விரு வீரர்களும், இரண்டு மாதங்களாக அங்கு ஆராய்ச்சி மேற்கொண்டனர்.இந்நிலையில், பாப் பென்கென் மற்றும் டக் ஹர்லியும், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பூமிக்கு நேற்று புறப்பட்டனர்.

இந்திய நேரப்படி நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, க்ரூ டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிரிந்து, பூமியை நோக்கி பயணிக்கத் துவங்கியது.வானிலை ஒத்துழைத்தால், இன்று அதிகாலை, 12:30 மணியளவில் நாசா வீரர்கள், பூமியை வந்தடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. புளோரிடா அருகில் உள்ள அட்லாண்டிக் பெருங்கடலில், புயல் உருவாகி இருப்பதால், மெக்சிகோ வளைகுடாவில், விண்கலத்தை, 'பாராசூட்' உதவியுடன் இறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, நாசா தெரிவித்துள்ளது.

பூமிக்கு புறப்படுவதற்கு முன், டக் ஹர்லி கூறுகையில், “இந்த இரண்டு மாதங்கள், மிகச் சிறந்த முறையில் அமைந்திருந்தன. ஆராய்ச்சி மேற்கொள்ள எங்களுக்கு உதவிய குழுவினருக்கு நன்றிகள்,” என்றார்.இதேபோல், பாப் பென்கென் கூறுகையில், “விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவது கடினமான பணி. அவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது, அதை விட முக்கியமானது,” என்றார்.விண்வெளி வீரர்களை, விண்வெளிக்கு அனுப்பிய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை, ஸ்பேஸ் எக்ஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை