வேறு செயலியை பயன்படுத்த யோசனை: சீன நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க திட்டம்...அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
வேறு செயலியை பயன்படுத்த யோசனை: சீன நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க திட்டம்...அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: சீன நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, அமெரிக்க செனட்டர்கள் மற்றும் டிரம்ப் நிர்வாகத்தின் உயரதிகாரிகள் டிக்டாக் செயலியை தங்கள் நாட்டில் தடை செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை விதிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளது. இதற்கு மாற்று திட்டம் வைத்துள்ளோம். டிக்டாக் செயலிக்கு பதில் வேறு செயலி பயன்பாட்டிற்கு கொண்டு வருவது பற்றி யோசித்து வருகிறோம். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சீனாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் அமெரிக்காவும் டிக்டாக் செயலியை தடை செய்ய திட்டமிட்டுள்ளது.கொரோனாவை பரப்பி உலக பொருளாதாரம் பாதிக்க சீனாவே காரணம் என்பது அமெரிக்காவின் புகாராகும். எனவே சீனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்து வருகிறது. சீன உளவுத் துறையால் டிக் டாக் செயலியில் இருக்கும் தகவல்கள் பயன்படுத்தப்படும் என்று அமெரிக்க அரசு தரப்பினர் கூறியதைத் தொடர்ந்து டிரம்ப், இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

மூலக்கதை