கணினி நாசக்காரர்களுக்கு தடை; ஐரோப்பிய கூட்டமைப்பு அதிரடி

தினமலர்  தினமலர்
கணினி நாசக்காரர்களுக்கு தடை; ஐரோப்பிய கூட்டமைப்பு அதிரடி

பிரசல்ஸ் : ஐரோப்பிய கூட்டமைப்பு, முதன் முறையாக, சீனா, ரஷ்யா, வட கொரியாவைச் சேர்ந்த கணினி நாசக்காரர்கள், ஆறு பேர் மற்றும் மூன்று குழுக்களுக்கு தடை விதித்துள்ளது.

இது குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பின் வெளியுறவு கொள்கை பிரிவு தலைவர் ஜோசப் போரல் கூறியதாவது: நெதர்லாந்தைச் சேர்ந்த, ரசாயன ஆயுத தடுப்பு குழு, மேற்காசிய நாடான சிரியா, ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துகிறதா என ஆராய்ந்து வந்தது. இக்குழுவின், 'கம்ப்யூட்டர் நெட்ஒர்க்'கில் ரஷ்யாவின் ஜி.ஆர்.யு., அமைப்பைச் சேர்ந்த கணினி நாசக்காரர்கள் புகுந்து தகவல்களை திருட முயன்றனர். அதை நெதர்லாந்து முறியடித்தது.

இந்த ஜி.ஆர்.யு., அமைப்பு, உக்ரைனுடன் வர்த்தகம் புரியும் நிறுவனங்களின் கணினிகளுக்கு, 'நாட்பெட்யா' என்ற வைரசை அனுப்பி, கணினிகளை முடக்கியது. இதனால், பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. உக்ரைன் மின் 'கிரிட்'களும், மின் வினியோகம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டன. இதேபோல, சீனாவைச் சேர்ந்த நான்கு பேர், பல நாடுகளில், நிறுவனங்களின் தகவல்களை திருடி, பெரும் இழப்பை ஏற்படுத்தினர்.

அவர்களில், ஜங் சிலாங் என்பவர், அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அவரை பணிக்கு அமர்த்திய சீனாவின், 'ஹூவாயிங் ஹைடைய்' நிறுவனம் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வட கொரியாவின், 'சோசன் எக்ஸ்போ' நிறுவனம், 'வானாக்ரை' என்ற வைரஸ் மூலம், 'சோனி பிக்சர்ஸ்' நிறுவனத்தின் தகவல்களை திருடியது.

அத்துடன், வியட்னாம் மற்றும் வங்கதேச வங்கிகளின் கணினிகளில் நாசவேலைகளை செய்து, கொள்ளைக்கு துணை புரிந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளான தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், ஐரோப்பிய நாடுகளுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் உள்ள அவற்றின் சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். ஐரோப்பிய கூட்டமைப்பு, முதன் முறையாக, கணினி நாசக்காரர்களுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை