பொருளாதாரத்தை தாக்கிய 'கொரோனா'

தினமலர்  தினமலர்
பொருளாதாரத்தை தாக்கிய கொரோனா

உலகளவில் கொரோனா பாதிப்பால், உலக பொருளாதாரத்தில் ரூ.285 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. உலகளவில் 14.7 கோடி பேர் வேலை இழந்துள்ளனர் என சிட்னி பல்கலை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் 2020 துவக்கத்தில் பரவ தொடங்கிய கொரோனா பாதிப்பு, வளர்ந்த நாடுகள், ஏழை நாடுகள் என வித்தியாசமின்றி இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதுவரை 1.24 கோடிக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை தடுப்பதற்காக பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு நாடுகள் தங்களது எல்லைகளை மூடின. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை, நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உற்பத்தி ஆகியவை பாதிக்கப்பட்டது.
சர்வதேச அளவில் வர்த்தகம், எரிசக்தி, நிதி, சுற்றுலா போன்ற முக்கிய துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதனால், பல நாடுகளின் வருமானம் பாதிக்கப்பட்டது. இது குறித்து நடத்திய ஆய்வில் ஊரடங்கால் உலக பொருளாதாரத்தில் ரூ.285 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. உலகளவில் 14.7 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். இதனால்,உலகளவில் ஊழியர்களின் சம்பளம் என்ற ரீதியில் ரூ.157 லட்சம் கோடி வருமானம் குறைந்துள்ளது. இது உலகின் மொத்த வருமானத்தில் 6 சதவீதம். விமான போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச வியாபாரம் குறைந்ததால், 5,360 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களிலும், 'வீட்டிலிருந்து பணி' என மாறியதால், புலம் பெயர்ந்தோர், கல்வியறிவு இல்லாத தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

மீண்ட பசுமை

கொரோனா பாதிப்பால் உலகிற்கு ஏற்பட்ட ஒரே நன்மை, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதுவரை வரலாற்றில் இல்லாத அளவாக பசுமை இல்ல வாயு வெளியீடு அளவு சரிவை (வழக்கமான அளவில் இருந்து 4.6 சதவீதம்) சந்தித்துள்ளது.

44


சர்வதேச விமான போக்குவரத்து துறையில் மொத்த வருமானம், 2019ம் ஆண்டை விட 44 சதவீதம் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

300


பிரிட்டனின் மொத்த உற்நாட்டு உற்பத்தி, கடந்த 300 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. 60 ஆயிரம் தொழிலாளர்கள் பணி இழப்பை சந்தித்துள்ளனர்.

47.2


அமெரிக்காவில் வேலை வாய்ப்பு சதவீதம் 2010 ல் இருந்து ஏற்றத்தில் இருந்தது. கடந்த ஏப்ரலில் இருந்து சரிவு தொடங்கியுள்ளது. 47.2 சதவீத இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாதவர்களாக உள்ளனர்.

மூலக்கதை