அத்துமீறும் போராட்டக்காரர்கள்; கொதிக்கும் டிரம்ப்

தினமலர்  தினமலர்
அத்துமீறும் போராட்டக்காரர்கள்; கொதிக்கும் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜார்ஜ் புளாயிட் படுகொலையை அடுத்து இனவெறிக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன. அட்லாண்டாவில் ஒரு பிரமாண்ட வெள்ளை இனத்தவர் சிலை உள்ளது. வெள்ளையர்களின் ஆதிக்கத்தை உணர்த்தும் சிலை அது. இந்த சிலையை உடனடியாக நீக்க சவுத் மவுண்ட் பார்க் பகுதியில் கருப்பின போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுபோல அமெரிக்காவில் பல நகரங்களில் பல ஆண்டுகளாக பொது இடங்களின் அடையாளங்களாகத் திகழும் சிலைகளை நீக்க போராட்டக்காரர்கள் கோருகின்றனர். இது டிரம்ப் அரசை எரிச்சல் அடையச் செய்துள்ளது. அட்லாண்டா செய்தியைக் கேட்ட ட்ரம்ப் வழக்கம்போல் எரிச்சல் அடைந்தார். போராட்டக்காரர்கள் என்ற பெயரில் கொள்ளையர்கள் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், பொது சொத்துக்களை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீண்டும் எச்சரித்தார்.

இதேபோல சியாட்டில் மாகாணத்தின் மேற்கு பகுதியில் போராட்டக்காரர்கள் ஓட்டி வந்த கார் இடித்து ஒரு பெண் பலியானார். மார்க்சிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் போராட்டம் என்ற பெயரில் பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கருப்பின சுதந்திரத்தில் ஈடுபடுவோர் என்ற போர்வையில் இவர்கள் வெள்ளையர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்துகின்றனர் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சனியன்று அமெரிக்க சுதந்திர தின உரையில் காட்டமாக தெரிவித்துள்ளார்.

குடியரசு கட்சி இன வேறுபாட்டை களைந்து ஒற்றுமையான முன்னேறும் சமூகத்தை அடைய தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் சுயலாபத்திற்காக போராட்டக்காரர்கள் என்ற பெயரில் இது போல அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை