பெரும் தலைவராக உருவெடுக்க முயலும் அமெரிக்க ராப் பாடகர்; கனவு பலிக்குமா?

தினமலர்  தினமலர்
பெரும் தலைவராக உருவெடுக்க முயலும் அமெரிக்க ராப் பாடகர்; கனவு பலிக்குமா?

வாஷிங்டன்: மைக்கேல் ஜாக்சன், முகமது அலி உள்ளிட்ட கருப்பின பிரபலங்கள் நிறவெறியை எதிர்த்து போராடி வந்தனர். மேலும் அவர்களது கருத்துக்களை தங்கள் தொழில்களிலும் அவர்கள் காண்பித்தனர். இந்நிலையில் குடியரசுக் கட்சிக்கு ஆதரவளிக்கும் கருப்பின மக்கள் அவ்வப்போது அமெரிக்காவில் விமர்சிக்கப்படுவதுண்டு. கட்சி சாராமல் வெளியிலிருந்து ஆதரவு தெரிவிக்கும் கருப்பின பிரபலங்கள் மீது அவ்வப்போது கருத்து மோதல் தாக்குதல் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.

300 ஆண்டுகளாக அடிமைப்பட்டு தற்போது அந்த நிலையில் இருந்து மீண்டுவந்து கொண்டிருக்கும் கருப்பர்கள் நிறவெறியை ஊக்குவிக்கும் டிரம்புக்கு ஆதரவு அளிக்கக்கூடாது என பல கருப்பின அமைப்புகள் தெரிவித்து வருகின்றன. பிரபல அமெரிக்க ராப் பாடகர் கேன் வெஸ்ட், தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப், பிடேன் ஆகியோரை எதிர்த்து தான் 2020 நவ.,3ம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவின் பிரபல கருப்பின பாடகர்களில் ஒருவரான இவர், பிரபல மாடல் கிம் கதர்ஷியானின் கணவர். தனது ரேப் இசை ஆல்பங்கள் மூலமாக கருப்பின மக்கள் சுதந்திரத்துக்கு குரல் கொடுத்து வருகிறார். மேலும் சமீபத்திய ஜார்ஜ் புளாயிட் படுகொலைக்குப் பிறகு கருப்பின மக்கள் நல்வாழ்வுக்காக 2 மில்லியன் டாலர் நிதி அளித்துள்ளார். தன்னை ஓர் அரசியல் தலைவராக செதுக்கிக்கொள்ள முயன்ற வெஸ்ட், கடந்த 2016ம் ஆண்டு எம் டிவி விழாவில் தான் 2020ம் ஆண்டு அதிபர் தேர்தலில் பசுமை கட்சி குழுமம் சார்பில் போட்டியிடப் போவதாகத் தெரிவித்தார்.

பின்னர் இவர் ஜனநாயக கட்சியை தனது பாடல்கள் மூலம் எதிர்த்தார். டிரம்புக்கு ஆதரவாக சில விஷயங்களில் குரல்கொடுத்தார். ஜார்ஜ் புளாயிட் படுகொலை காரணமாக அமெரிக்க கருப்பின மக்கள், டிரம்ப் மீது கடும் அதிருப்தி அடைந்து ஜனநாயக கட்சிக்கு ஆதரவளிக்கின்றனர்.
பெரும்பாலும் அமெரிக்க கருப்பின மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவாளர்களாக உள்ள நிலையில் கருப்பின பிரபலங்களும் டிரம்புக்கு எதிராகவே போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இந்நிலையில் முன்னர் டிரம்புக்கு ஆதரவளித்து வந்த வெஸ்ட், தற்போது அவரை எதிர்த்து போட்டியிட உள்ளதாக தெரிவித்தது கருப்பின மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.

ஆனால் குடியரசு கட்சி இவரை ஒரு நகைச்சுவை அரசியல்வாதியாகவே பார்க்கிறது. டிரம்ப், பிடேன் ஆகிய இரு மலைகளுடன் மோதும் ஒரு மடு போலவே இவர் பார்க்கப்படுகிறார். இவருக்கு பிரபல அமெரிக்க கார் தொழில் ஜாம்பவான் எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார்.

மூலக்கதை