ஹாங்காங் விவகாரம்: ஐ.நா.,வில் கவலையை பதிவு செய்த இந்தியா

தினமலர்  தினமலர்
ஹாங்காங் விவகாரம்: ஐ.நா.,வில் கவலையை பதிவு செய்த இந்தியா

ஜெனீவா: ஹாங்காங் விவகாரம் தொடர்பாக வெளியாகும் பல்வேறு அறிக்கைகள் கவலையை அளிப்பதாக இருப்பதாக ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் முதன்முறையாக இந்தியா பதிவு செய்துள்ளது.

சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக்குழு, ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற நேற்று முன்தினம் (ஜூன் 30) ஒப்புதல் அளித்தது. இதற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் கையெழுத்திட்டதை அடுத்து ஹாங்காங்கில் நேற்று முதல் அமலுக்கு வந்தது. ஹாங்காங்கிற்கு சுதந்திரம் கோரி போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முதல் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவுக்கு எதிராக போராடுவோர் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விட வழி செய்யும் சட்டத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.


இந்நிலையில், ஜெனீவாவில் நடைபெற்று வரும் 44வது ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் 3வது கூட்டத்தில் ஐ.நா.,வுக்கான இந்திய தூதர் ராஜீவ்குமார் சந்தர் பேசியதாவது,'சீனாவின் தன்னாட்சி பெற்ற பிரதேசமான ஹாங்காங் நகரத்தை பெருமளவிலான இந்திய சமூகத்தினர் தங்கள் வீடாக கருதி வருகின்றனர். சமீபத்தில் அங்கு நடைபெற்று வரும் நிகழ்வுகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. தற்போதைய நிலவரம் குறித்து கவலை தெரிவிக்கும் பல அறிக்கைகள் கேள்விப்படுகிறோம். இதில் சம்பந்தப்பட்ட தரப்பினர், இந்த கருத்துகளை கணக்கில் எடுத்து கொண்டு, முறையாகவும், தீவிரமாகவும் மற்றும் நோக்கங்களை தீர்த்து வைப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம்'. இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை