பாக்.,கில் பயங்கரவாதிகள் தாக்குதல் எஸ்.ஐ., உள்ளிட்ட 11 பேர் பலி

தினமலர்  தினமலர்
பாக்.,கில் பயங்கரவாதிகள் தாக்குதல் எஸ்.ஐ., உள்ளிட்ட 11 பேர் பலி

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள, பங்குச்சந்தை அலுவலக வளாகத்தில், நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், போலீஸ் எஸ்.ஐ., இரண்டு பொதுமக்கள் உள்ளிட்ட, 11 பேர் பலியாகினர்.

அண்டை நாடான பாகிஸ்தானின் கராச்சியில், சண்ட்ரிகர் சாலையில், பங்குச்சந்தை அலுவலக வளாகம் அமைந்துள்ளது. இங்கு, நேற்று காலை, பங்குச்சந்தை வர்த்தக பணிகள், பரபரப்பாக நடைபெற்று வந்தன. அப்போது, பயங்கரவாதிகள் நான்கு பேர், அந்த வளாகத்திற்குள் காரில் வந்தனர். காரில் இருந்தபடியே, துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், கையெறி குண்டுகளையும் வீசினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், எதிர் தாக்குதல் நடத்தினர். இதில், போலீஸ் எஸ்.ஐ., ஒருவர், நான்கு காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இருவர் பலியாயினர்; 7 பேர் காயமடைந்தனர்.தகவல் அறிந்து அங்கு வந்த, பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், பயங்கரவாதிகள் நால்வரும் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:பயங்கரவாதிகளின் திடீர் தாக்குதலால், பங்குச்சந்தை அலுவலக வளாகத்தில், பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், பொதுமக்கள் சிதறி ஓடினர். பாதுகாப்பு படையினர், அவர்களை பின்வாசல் வழியாக வெளியேற்றினர். கொரோனா வைரஸ் காரணமாக, வழக்கமான அளவில் பொதுமக்கள் கூடவில்லை என்பதால், உயிரிழப்புகள் அதிகமில்லை.கண்காணிப்புபங்கு வர்த்தகம் நடைபெறும் பிரதான கட்டடத்திற்குள், பயங்கரவாதிகள் செல்வதை, பாதுகாப்பு படையினர் தடுத்துவிட்டனர்.

இதனால், பங்கு வர்த்தக பணிகள் தடையின்றி தொடர்ந்தன.தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர், பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த சல்மான் என, தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு, பி.எல்.ஏ., எனப்படும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்று உள்ளது.தாக்குதலை தொடர்ந்து, பங்குச்சந்தை அலுவலக வளாகம் 'சீல்' வைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தாக்குதலை கண்டித்துள்ள, பாக்., அதிபர், ஆரிப் ஆல்வி மற்றும் பிரதமர் இம்ரான்கான் ஆகியோர், 'இதுபோன்ற தாக்குதல் நடவடிக்கைகளில், பயங்கரவாதிகள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டார்கள். பயங்கரவாதத்தை, நாட்டில் இருந்து அடியோடு அகற்ற, உறுதியாக உள்ளோம்' என்றனர்.

மூலக்கதை