ரஷ்யாவில் ஆற்றில் கலந்த 20,000 டன் டீசல்: அதிபர் கொந்தளிப்பு

தினமலர்  தினமலர்
ரஷ்யாவில் ஆற்றில் கலந்த 20,000 டன் டீசல்: அதிபர் கொந்தளிப்பு

மாஸ்கோ: ரஷ்யாவில் தொழிற்சாலை ஒன்றில் டேங்கர் வெடித்ததால் 20,000 டன் டீசல் ஆற்றில் கலந்தது.


ரஷ்யாவின் கிரஸ்னோயார்ஸ்க் மாகாணத்தில் உள்ள தொழில் நகரம் நோரில்ஸ்க். இது மாஸ்கோவிலிருந்து 2,900 கி,மீ., தொலைவில் உள்ளது. இங்கு நோரில்ஸ்க் நிக்கல் குழுமத்திற்கு சொந்தமான தொழிற்சாலையில் எண்ணெய் டேங்க் அதிக அழுத்தம் காரணமாக வெடித்து சிதறியது. அதனால் டேங்கிலிருந்த 20,000 டன் டீசல் 12 கி.மீ., சுற்றளவுக்கு பரவியது. வெளியேறிய டீசல் ஆர்டிக் கடலில் கலக்கும் அம்பர்னாயா மற்றும் டால்டிகன் ஆறுகளில் கலந்தது. டீசல் கலந்ததால் ஆற்று நீர் முழுவதும் சிவப்பு நிறத்திற்கு மாறியது. ஆற்றில் வாழும் உயிரினங்களும் இதனால் மடிந்து வருகின்றன.

எண்ணெய் டேங்க் வெடித்து இரு நாட்கள் கழித்து தான் அந்நாட்டு அரசு அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது. அதுவும் சமூக வலைதளத்தில் வெளியாகியிருந்த போட்டோக்களை பார்த்து தான் ஆறுகளில் எண்ணெய் கலந்த சம்பவம் அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது. ஆற்றினை ஆய்வு செய்த ரஷ்ய மீன்வளத் துறை அதிகாரிகள் ஆற்றினை பழைய நிலைக்கு கொண்டு வர 10 ஆண்டு காலம் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.


இச்சம்பவம் தொடர்பாக காணொளியில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ' டீசல் எண்ணெய் ஆற்றில் கலந்த விஷயம் இரு நாட்களுக்கு பிறகு தான் தெரிந்துள்ளது. இது தான் நீங்கள் வேலை பார்க்கும் லட்சணமா' என்று திட்டியுள்ளார். இதையடுத்து அம்பர்னயா ஆறு மற்றும் டால்டிகன் ஓடும் பகுதிகளுக்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் நோர்லிஸ்க் நிக்கல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கு அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார். அம்பர்னாயா மற்றும் டால்டிகன் ஆறுகளை சுத்தப்படுத்துவது கடினம், இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள், உயிரினங்களுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை