அமெரிக்க போலீஸ் மீண்டும் அத்துமீறல்; விஸ்வரூபம் எடுக்கும் போராட்டம்

தினமலர்  தினமலர்
அமெரிக்க போலீஸ் மீண்டும் அத்துமீறல்; விஸ்வரூபம் எடுக்கும் போராட்டம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் போராட்ட களத்தில் முதியவரை போலீசார் கீழே தள்ளிய சம்பவம் அங்கு மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் உள்ள மின்னெபொலிஸ் நகரில், கடந்த மாதம் 25ம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற ஆப்ரிக்க அமெரிக்கரை கீழே தள்ளி அவரது கழுத்தில் ஒரு போலீசார் பலமாக அழுத்தியுள்ளார். மக்கள் முன்னிலையில் சாலையில் நடந்த இந்தச் சம்பவத்தின்போது ஜார்ஜ் உயிரிழந்துள்ளார்.



ஜார்ஜின் உயிரிழப்புக்கு நீதி கேட்டும் காவலரின் செயலைக் கண்டித்தும் அமெரிக்காவில் இருக்கும் இனவெறிக்கு முடிவுகட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் பல லட்சக்கணக்கான மக்கள் சாலைகளில் திரண்டு பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மினசோட்டாவில் சிறிய அளவில் துவங்கிய போராட்டம் தற்போது, அமெரிக்கா முழுவதும் பரவிவிட்டது.இதையடுத்து, ஜார்ஜ் உயிரிழப்பில் தொடர்புடைய நான்கு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது, கொலை மற்றும் கொலைக்கு உட்தையாக இருந்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அத்துமீறும் போலீசார்


இந்நிலையில், போராட்டக்காரர்கள் மீது காவலர்கள் அத்துமீறும் புகைப்படங்களும் வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி, போராட்டத்தை மேலும் வலுப்படுத்தி வருகிறது. நியூயார்க்கில் உள்ள புபலோ நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடை உத்தரவை அமல்படுத்த நூற்றுக்கணக்கான போலீசார் போராட்டக் களத்துக்கு வந்தனர். அப்போது அங்கு வந்த 75 வயது மதிக்கத்தக்க முதியவரை, போலீசார் கீழே தள்ளினர். நிலை குலைந்து விழுந்த முதியவர் தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்தது. அந்த முதியவருக்கு உதவாமல் போலீசார் கடந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ போராட்டக்காரர்களை மேலும் கொதிப்படையச் செய்துள்ளது.



'போலீசாரால் கீழே தள்ளப்பட்ட முதியவர் குறித்த விவரங்கள் தெளிவாகத் தெரியவில்லை. அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் நிலை கவலைக்கிடமாகவே உள்ளது. பல நாள்களாக அமைதியாக நடந்துவந்த போராட்டத்தில் தற்போது நடந்த விஷயம் மிகவும் வருத்தமாக உள்ளது. முதியவரைக் கீழே தள்ளிய இரண்டு காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்' என, புபலோ நகர மேயர் பைரோன் பிரவுன் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை