நியூயார்க்கில் வன்முறை அதிகரிப்பால் ஊரடங்கு அமல்

தினமலர்  தினமலர்
நியூயார்க்கில் வன்முறை அதிகரிப்பால் ஊரடங்கு அமல்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில் ஜார்ஜ் பிளாய்டு கொலையை கண்டித்து நடந்த போராட்டம், வன்முறையாக மாறியதை அடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மின்னபொலிஸ் நகரில் கடந்த மே 25ம் தேதி ஜார்ஜ் பிளாய்டு (49) என்ற கறுப்பின இளைஞரை சந்தேகத்தின் பேரில் விசாரித்த போலீசார், தரையில் வீழ்த்தி, அவருடைய கழுத்தின் மீது, தன் கால் முட்டியால் அழுத்தியதால் அவர் கொல்லப்பட்டார். இதனை கண்டித்து அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சில நாட்களாக அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வந்தது. இதனிடையே ஞாயிறன்று மன்ஹாட்டனில் உள்ள நைக் ஷோரூமில் புகுந்த போராட்டகாரர்களில் சிலர், பொருட்களை கொள்ளையடிக்க துவங்கினர். ராக்பெல்லர் மையம் அருகே ஷோரூம்களின் கண்ணாடிகளை உடைத்தனர். இது தொடர்பான வீடியோ, சமூகவலைதளங்களில் பரவியதை அடுத்து வன்முறையில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்தனர்.


நியூயார்க் நகர மேயர் பில் டி பிளாசியோ மற்றும் குவாமோ இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛நியூயார்க்கில் வசிக்கும் 8 மில்லியன் மக்கள் திங்கள் இரவு 11 மணி முதல் அடுத்த நாள் காலை 5 மணி வரை ஊரடங்கின் கீழ் வருகின்றனர். வன்முறை மற்றும் சொத்து சேதங்களைத் தடுக்க போலீசாரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கப்படும்' என கூறியிருந்தனர். ஜார்ஜ் ஃபிலாய்டின் மரணத்திற்கு நீதி கேட்கும் போராட்டத்தால் அதிக மக்கள் தொகை கொண்ட நியூயார்க்கில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களை அதிகரிக்கும் என்றும், சமுதாயத்தை மேம்படுத்த அரசியல் தலைவர்களுக்கு மக்கள் அழுத்தம் தர வேண்டும். போலீசாரின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து சுதந்திரமான விசாரணை வேண்டுமென குவாமோ வலியுறுத்தி உள்ளார்.


மிளகு ஸ்பிரே அடிப்பது, போராட்டத்தை நோக்கி போலீசார் காரை செலுத்துவது போன்றபோலீசாரின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ள குவாமோ, மேலும் போராட்டம் நீடித்தால் ஜூன் 8 முதல் மீண்டும் பொருளாதாரத்தை திறப்பது கடினமாக கூடுமெனவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை