நிலவுக்கு சுற்றுலா போகலாம் ஜப்பான் தொழிலதிபர்

தினமலர்  தினமலர்
நிலவுக்கு சுற்றுலா போகலாம் ஜப்பான் தொழிலதிபர்

டோக்கியோ:'நிலவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள, எட்டு டிக்கெட்டுகள் உள்ளன. யார் வேண்டுமானாலும் என்னுடன் வரலாம்' என, ஆசிய நாடான ஜப்பானைச் சேர்ந்த தொழிலதிபர் யுசாகு மேசவா, அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் இலான் மஸ்க்கின், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் விண்வெளி ஆய்வில் ஈடுபட்டுள்ளது. வரும், 2023ம் ஆண்டில், நிலவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை, அந்த நிறுவனம், 2018ல் அறிவித்தது. அப்போது, நிலவின், இந்தப் பயணத்துக்கான டிக்கெட்டுகளை, ஜப்பானைச் சேர்ந்த தொழிலதிபர் யுசாகு மேசவா முன்பதிவு செய்துள்ளார். அதற்காக பெரும்தொகையை அவர் செலுத்தியுள்ளார்.

அப்போது, இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டபோது, பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், நிலவு சுற்றுலாவுக்கு தன்னுடன் வருவதற்கு காதலியை தேடுவதாகவும், 45 வயது மேசவா அறிவித்திருந்தார். உலகெங்கிலும் இருந்து, 30 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன. ஆனால், காதலியை அழைத்துச் செல்லும் திட்டத்தை, அவர் கைவிட்டார்.பின், சிறந்த கலைஞர்களை அழைத்து செல்ல உள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சமூக வலைதளத்தில், புதிய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். 'நிலவுக்கு சுற்றுலா செல்வதற்காக, விண்கலத்தில், 10 - 12 பேர் செல்லலாம். தற்போது என்னிடம், எட்டு டிக்கெட்டுகள் உள்ளன. என்னுடன் வருவதற்கு தயாராக உள்ளவர்கள், விண்ணப்பங்களை அனுப்பலாம்' என, தன் பதிவில் அவர் கூறியுள்ளார். 'மார்ச், 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை