ஜமால் கசோகி கொலையில் சவுதி இளவரசருக்கு தொடர்பு

தினமலர்  தினமலர்
ஜமால் கசோகி கொலையில் சவுதி இளவரசருக்கு தொடர்பு

வாஷிங்டன்:பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பு உள்ளதை அமெரிக்க புலனாய்வு துறை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்காசிய நாடான சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர் ஜமால் கசோகி. இவர் துருக்கியில் இருந்தபடி அமெரிக்காவின் 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் சவுதி அரசு மற்றும் இளவரசர் குறித்து சர்ச்சைக்குரிய கட்டுரைகளை வெளியிட்டு வந்தார்.

இரு ஆண்டுகளுக்கு முன் துருக்கியில் உள்ள சவுதி துாதரகத்திற்குச் சென்ற அவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த கொலையின் பின்னணியில் முகமது பின் சல்மான் உள்ளதாக தகவல்கள் வெளியாயின. இதையடுத்து கொலை குறித்து அமெரிக்க புலனாய்வு விசாரித்து முந்தைய அதிபர் டிரம்பிடம் அறிக்கை அளித்தது.

அமெரிக்கா சவுதிக்கு அதிக அளவில் ஆயுதங்களை சப்ளை செய்வதால் டிரம்ப் அந்த அறிக்கையை கிடப்பில் போட்டு விட்டார். இந்நிலையில் அமெரிக்க அதிபராக பதவியேற்று உள்ள ஜோ பைடன் பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலை குறித்த அறிக்கையை பகிரங்கமாக வெளியிட உள்ளார்.

இது குறித்து புலனாய்வு அதிகாரி ஒருவர் கூறும்போது 'அந்த அறிக்கையில் கசோகி கொலையில் முகமது பின் சல்மானுக்கு உள்ள தொடர்பு குறித்த தகவல் இடம் பெற்று உள்ளதாக தெரிகிறது. எனினும் அறிக்கை வெளியானால்தான் உறுதியாக கூற முடியும்' என தெரிவித்துள்ளார்.

ஜோ பைடன் எடுத்துள்ள முடிவால் அமெரிக்கா - சவுதி அரேபியா இடையிலான உறவில் உரசல் ஏற்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.சவுதி மன்னருடன் பைடன் பேச்சுஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் உடன் தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை தடுப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஜமால் கசோகி கொலை குறித்த புலனாய்வு அறிக்கை வெளியாக உள்ள நிலையில் ஜோ பைடன் சவுதி மன்னருடன் பேசியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மூலக்கதை