விமான விபத்து: 6 வீரர்கள் பலி

தினமலர்  தினமலர்
விமான விபத்து: 6 வீரர்கள் பலி

கொரோனா பலி அதிகரிப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவில், கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை, ஐந்து லட்சத்தை நெருங்குகிறது.உலகில், கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு, இரண்டு கோடியே, 84 லட்சத்து, 3,664 பேர், வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா பலி எண்ணிக்கை, ஐந்து லட்சத்தை நெருங்கி உள்ளது. இதுவரை, நான்கு லட்சத்து, 98 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். கடந்த ஜனவரி, 19ம் தேதி, பலி எண்ணிக்கை, நான்கு லட்சத்தை கடந்தது. கடந்த ஒரே மாதத்தில், பலி எண்ணிக்கை, மேலும் ஒரு லட்சம் அதிகரித்துள்ளது. இது குறித்து, அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர் அந்தோணி பவுசி கூறுகையில், “கடந்த, 102 ஆண்டுகளில் காணாத அளவிற்கு, நாம், ஒரு வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளோம்,” என்றார்.இதற்கிடையே, வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரசுக்கான தடுப்பூசி மருந்துகளை, மக்களுக்கு செலுத்தும் பணிகள், முழுவீச்சில் நடந்து வருகின்றன.
விமான விபத்து: 6 வீரர்கள் பலி
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில், விமானப் படைக்கு சொந்தமான, ஒரு போர் விமானம் விபத்துக்குள்ளானதில், ஆறு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் வெராகுரூஸ் மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து, விமானப் படைக்கு சொந்தமான, 'லியர் ஜெட் - 45' ரக போர் விமானம், நேற்று முன்தினம் புறப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில், பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம், கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி, ஆறு ராணுவ வீரர்கள், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக, மெக்சிகோ ராணுவ அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அந்த விமானத்தில் பயணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை குறித்த எந்த விபரங்களும் வெளியிடப்படவில்லை.

மூலக்கதை