வந்தே மாதரம் என கோஷம்: வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் கார் பேரணி.!!!

தினகரன்  தினகரன்
வந்தே மாதரம் என கோஷம்: வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் கார் பேரணி.!!!

சான் பிரன்சிஸ்கோ: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக அமெரிக்கா வாழ் இந்தியர்கள் நேற்று கார் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வெயில், கடுமையான குளிர் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் விவசாயிகள் நடத்தும் போராட்டமானது 89-வது நாளை எட்டியுள்ளது.போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. மேலும், விவசாயிகள் உயிரிழக்கும் சம்பவம் என்பதும் தொடர்கதையாகி வருகிறது. இதற்கிடையே, விவசாயிகளுக்கு போராட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் உலகில் உள்ள பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.வெளிநாட்டினர் இந்திய அரசிற்கு எதிராக கருத்து தெரிவிப்பதற்கு இந்திய பிரபலங்களும், விளையாட்டு வீரர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் சான் பிரன்சிஸ்கோவில் நேற்று பிப்ரவரி 21-ம் தேதி மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் கார் பேரணி நடத்தியுள்ளனர். கார் பேரணி மதியம் 1:30 மணிக்கு (இஎஸ்டி) மிஷன் சான் ஜோஸ் உயர்நிலைப் பள்ளி வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவை பல என்.ஆர்.ஐ.க்கள் கார் பேரணியில் இணைந்தனர். பேரணியின் போது ஆதரவாளர்கள் \'வந்தே மாதரம்\' என்று கோஷமிட்டனர்.முன்னதாக, இந்தியாவின் புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக அமெரிக்கா முன்வந்தது, இது இந்திய சந்தைகளின் \'செயல்திறனை மேம்படுத்தும்\' மற்றும் அதிக தனியார் துறை முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கைகளை வரவேற்கிறது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை