அணு ஆயுத தடை சட்டம் அமலுக்கு வந்தது

தினமலர்  தினமலர்
அணு ஆயுத தடை சட்டம் அமலுக்கு வந்தது

நியூயார்க் உலகில், முதன் முறையாக, ஐ.நா.,வின் அணு ஆயுத தடை சட்டம், அமலுக்கு வந்தது.

கடந்த, 2017, ஜூலையில், ஐ.நா., பொதுச் சபையில், அணு ஆயுத தடை ஒப்பந்தம் தொடர்பான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, 120க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

ஆனால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், இந்தியா, பாக்., இஸ்ரேல் ஆகிய ஒன்பது நாடுகள், தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அதுபோல, 'நேட்டோ' கூட்டணியைச் சேர்ந்த, 30 நாடுகளும் ஒதுங்கிக் கொண்டன.

இந்நிலையில், கடந்தாண்டு அக்டோபரில், அணு ஆயுத தடை ஒப்பந்தத்திற்கு சட்ட அதிகாரம் வழங்கும் ஒப்பந்தத்தில், 50 நாடுகள் கையொப்பமிட்டன. இதை அமல்படுத்துவதற்கான அவகாசம் முடிவடைந்தது.இதை அடுத்து, அணு ஆயுத தடை சட்டம் அமலுக்கு வந்ததாக, ஐ.நா., அறிவித்துள்ளது. இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த நாடுகளின் எண்ணிக்கை, 61 ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து, 'நோபல்' பரிசு பெற்ற பீட்ரைஸ் பிஹன் கூறியதாவது:

ஐ.நா., அணு ஆயுத தடை சட்டம் அமலுக்கு வந்துள்ளது; இது, வரலாற்று சிறப்பு மிக்க நாள். அணு ஆயுத தடை ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்த நாடுகள், இனி எந்த காலத்திலும், அணு ஆயுதங்களை தயாரிக்கவோ, சோதனை செய்யவோ, வைத்திருக்கவோ கூடாது. அதுபோல, அணு ஆயுதங்கள் அல்லது அணு குண்டுகளை சக நாடுகளுக்கு வழங்குவதையும் இந்த சட்டம் தடை செய்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை