துணை அதிபராக பதவியேற்ற போது கமலா ஹாரிஸ் ‘ஊதா கலரு கோட்’ அணிந்தது ஏன்?..அமெரிக்க பெண்கள் மத்தியில் சுவாரஸ்ய தகவல்கள்

தினகரன்  தினகரன்
துணை அதிபராக பதவியேற்ற போது கமலா ஹாரிஸ் ‘ஊதா கலரு கோட்’ அணிந்தது ஏன்?..அமெரிக்க பெண்கள் மத்தியில் சுவாரஸ்ய தகவல்கள்

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபராக பதவியேற்ற போது கமலா ஹாரிஸ் ‘ஊதா கலரு கோட்’ அணிந்தது ஏன்? என்பது குறித்து அமெரிக்க பெண்கள் மத்தியில் சுவாரஸ்யமாக பேசப்பட்டு வருகிறது. அமெரிக்க துணை அதிபராக இந்தியாவை பூர்விகமாக உடைய கமலா ஹாரிஸ் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். இவரது பதவியேற்பு விழாவின் போது அவரது செயல்பாடுகளை சர்வதேச ஊடகங்கள் உன்னிப்பாக கவனித்து வந்தன. காரணம், இந்திய-அமெரிக்க வம்சாவளியான கறுப்பின பெண் ஒருவர் அமெரிக்க துணை அதிபராக முதன் முறையாக பதவியேற்றதால் அவரது அனைத்து நடவடிக்கைகளும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தன. குறிப்பாக அவரது எளிமை அல்லது அரவணைப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இதற்கிடையே கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்ற போது, அவர் ஏன் ஊதா நிற கோட் அணிந்திருந்தார் என்பது குறித்து அமெரிக்க பெண்கள் மத்தியில் சுவாரஸ்யமாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, ஊதா உடைக்கு பின்னால் உள்ள விஷயங்களை பார்த்தால் ஆச்சரியமான சில தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்தாண்டு தொடங்கிய அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தின்போது கமலா ஹாரிஸ் பல இடங்களில் ஊதா நிற உடையை அணிந்து பிரசாரம் மேற்கொண்டார். ஆனால் உண்மையில், ஹாரிஸ் ஊதா உடை தேர்வு செய்தற்கான முக்கிய காரணம் ‘ஷெர்லி சிஷோமை’ கவுரவிப்பதற்காகதான் என்று கூறுகின்றனர். கடந்த 1972ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில்  ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட முதல் ஆப்பிரிக்க - அமெரிக்க பெண்மணி ஷெர்லி சிஷோம், தனது வரலாற்று சிறப்புமிக்க தேர்தல் பிரசாரத்தின் போது ஊதா நிற உடை அணிந்திருந்தார். அவரை கமலா ஹாரிஸ் தனது முன்மாதிரியாக கருதுவதால், ‘ஷெர்லியை’ கவுரவிக்கும் வகையில் ஊதா உடையை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. இந்த ஆடையை கறுப்பினத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் ஜான் ரோட்ஜர்ஸ் மற்றும் செர்ஜியோ ஹட்சன் ஆகியோர் வடிவமைத்தனர். இந்த ஆடையை அணிவதன் மூலம்,  ‘ஷெர்லி’யின் கருத்துகளை பின்பற்றுபவராக கமலா ஹாரிஸ் செயல்படுபவராக இருப்பார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அமெரிக்காவில் கறுப்பின பெண்களுக்கு விரோதமான சூழல் இருப்பதால், கமலா ஹாரிசின் பாதை அவ்வளவு எளிதானதாக இருக்காது என்றும் கூறுகின்றனர். இருந்தும் கடந்த தேர்தலின் போது முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் போட்டியிட்டு தோற்ற நிலையில், தற்போது பெண் ஒருவர் துணை அதிபராக பதவியேற்றதை அமெரிக்க பெண்கள் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து அமெரிக்க கறுப்பின பெண் வல்லுனர்கள் கூறுகையில், ‘அமெரிக்க பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கமலா ஹாரிஸ் ஒரு முன்மாதிரியாக இருப்பார் என்று நம்புகிறோம். கறுப்பின மற்றும் புலம் பெயர்ந்த இந்தியா வம்சாவளியான பெண் ஒருவர், துணை அதிபராகி உள்ளது எங்களுக்கு நம்பிக்கையைத் தருவதாகவும், கனவுகளை நிஜமாக்க தைரியத்தையும் அளிக்கும். இன்றைய காலத்தில் அமெரிக்காவில் நடக்காத ஒன்று நடந்துள்ளது. இது மிகவும் பெருமையான தருணம்’ என்றனர்.

மூலக்கதை