ஆஸி.,யை வீழ்த்தி இந்திய அணி பிரிஸ்பேன் டெஸ்டில் பெரும் வெற்றி

தினமலர்  தினமலர்
ஆஸி.,யை வீழ்த்தி இந்திய அணி பிரிஸ்பேன் டெஸ்டில் பெரும் வெற்றி

பிரிஸ்பேன் : -பிரிஸ்பேனில் நடந்த நான்காவது டெஸ்டில் இளம் வீரர் ரிஷாப் பன்ட் துாணாக நின்று விளையாட 33 ஆண்டுகளுக்குப்பின் காபா மைதானத்தில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்தி பெரும் சாதனை நிகழ்த்தியது.

ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று போட்டி முடிவில் தொடர் 1-1 என சமனில் இருந்தது. 4வது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் நடந்தது. ஷமி, உமேஷ், பும்ரா, அஷ்வின், ஜடேஜா உட்பட என 9 பேர் காயத்தால் விலகினர்.இதனால் பிரிஸ்பேன் டெஸ்டில் இளம் சிராஜ், ஷர்துல், சைனி, நடராஜன், வாஷிங்டன் சுந்தர் என அனுபவமற்ற இளம் பவுலர்களுடன் களமிறங்கியது இந்தியா. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 369, இந்தியா 336 ரன்கள் எடுத்தன.2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 294 ரன்கள் எடுத்தது.

328 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணிக்கு சுப்மன் (91), புஜாரா (56) உதவினர். பன்ட் (89), வாஷிங்டன் (22) கடைசி நேரத்தில் அதிரடி காட்ட 2வது இன்னிங்சில் இந்தியா 329/7 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.கடந்த 33 ஆண்டுகளாக பிரிஸ்பேன் காபா மைதானத்தில் தோற்காத ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா தொடரை 2-1 என கைப்பற்றியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் 74 ஆண்டு வரலாற்றில் முதன் முறையாக அடுத்தடுத்து இரு டெஸ்ட் தொடரை (2018-19, 2020-21) வென்று சாதனை படைத்தது. விரிவான செய்தி விளையாட்டு பக்கத்தில்

மூலக்கதை