டிரம்ப் பதவியை பறிக்க 25வது சட்டத்திருத்தம் துணை அதிபர் நடவடிக்கை எடுக்கக்கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்

தினகரன்  தினகரன்
டிரம்ப் பதவியை பறிக்க 25வது சட்டத்திருத்தம் துணை அதிபர் நடவடிக்கை எடுக்கக்கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் 25வது சட்ட திருத்தத்தை அமல்படுத்தி துணை அதிபர் மைக் பென்ஸ், அதிபர் டிரம்ப்பை பதவியில் இருந்து நீக்க கோரும் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் 3ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பிடென் வெற்றி பெற்றார். தோல்வியை ஒப்பு கொள்ள மனமில்லாத அதிபர் டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தல் முடிவுகளை மாற்ற வலியுறுத்தி நீதிமன்றத்தை நாடினர். இதையடுத்து, நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜோ பிடெனின் வெற்றி கடந்த 6ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தை முற்றுகையிட்ட அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த கலவரத்தில் விமானப்படை பெண், போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இதனால், அதிபர் தானாக பதவி விலக வேண்டும், இல்லையென்றால் நாடாளுமன்றத்தில் பதவி பறிப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று சபாநாயகர் நான்சி பெலோசி எச்சரித்தார். மேலும், துணை அதிபர் மைக் பென்ஸ் 25வது திருத்தத்தை அமல்படுத்தி, அதிபர் டிரம்பை பதவியில் நீக்க வலியுறுத்தினார். ஆனால் இதற்கு பென்ஸ் மறுத்து தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் சபையில் அதிபர் டிரம்ப்பை பதவியில் இருந்து நீக்க துணை அதிபர் மைக் பென்சை வலியுறுத்தும் தீர்மானம் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டது. அப்போது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 223 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 205 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். குடியரசு கட்சியை சேர்ந்த உறுப்பினர்களில் ஒருவர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தார். மேலும், 5 பேர் இதில் பங்கேற்கவில்லை. இதனால் இந்த வலியுறுத்தல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.* பதவியை பறிக்க அல்ல25 சட்ட திருத்தத்தை அமல்படுத்த விரும்பாத துணை அதிபர் மைக் பென்ஸ், “அரசியலமைப்பு சட்டத்தின் 25வது திருத்தம் ஒருவருக்கு தண்டனை அளிக்கவோ  அல்லது பதவியை பறிக்கவோ கொண்டு வரப்பட்டது அல்ல. இப்போது, அதனை  பயன்படுத்தினால் அது மிகவும் தவறான முன் உதாரணமாக அமைந்து விடும்”, என்று  பதில் அளித்தார்.* யு டியூப் முடக்கம்வன்முறையை தூண்டும் வகையில் பேசிய கருத்துகள், வீடியோக்களை பகிர்ந்ததால், அதிபர் டிரம்பின் டிவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் 2 வாரங்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், யு டியூப் சேனலும்,` அதிபர் டிரம்பின் தற்போதைய நடவடிக்கைகள் வன்முறையை தூண்டியதன் அடிப்படையில் அவரது கணக்கு தற்காலிகமாக முடக்கப்படுகிறது’, என அதன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மூலக்கதை