பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்; பாக்., அரசு அதிரடி சட்டம்

தினமலர்  தினமலர்
பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்; பாக்., அரசு அதிரடி சட்டம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையிலான ஆண்மை நீக்க தண்டனை அளிக்கும் சட்டத்துக்கு பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதற்காக சில நாடுகள் கடுமையான சட்டங்களை இயற்றி வருகின்றன. இந்தியாவில் போக்சோ உள்ளிட்ட சட்டங்கள் கொண்டுவரப்பட்டு பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரணத் தண்டனை விதிக்கப்படுகிறது. தற்போது நமது அண்டை நாடான பாகிஸ்தான், பாலியல் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனையாக ஆண்மை நீக்குவது தொடர்பான சட்டம் இயற்ற பிரதமர் இம்ரான் கான் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

சமீபத்தில் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பேசிய இம்ரான் கான், 'பாலியல் வன்கொடுமைகளுக்கு முன்மாதிரியான தண்டனை அளிக்கும் மூன்று அடுக்கு சட்டத்தை அரசு விரைவில் அறிமுகப்படுத்தும்,' என்றார். அதன்படி, பாலியல் சட்டத்திருத்த வரைவு மசோதா தயார் செய்யப்பட்டு, நேற்று நடந்த பாகிஸ்தானின் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதா தொடர்பான விவாதத்தில், பாலியல் குற்றவாளிகளை நடுரோட்டில் தூக்கிலிட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

ஆனால், அவை நிராகரிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு ரசாயன முறையிலான ஆண்மை நீக்க தண்டனை அளிக்கும் சட்டத்துக்கு இம்ரான் கான் ஒப்புதல் அளித்ததாக பாகிஸ்தானின் ஜியோ டிவி (GeoTV) செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், காவல்துறையில் பெண்களை அதிக அளவில் சேர்ப்பது, கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரிப்பது, சாட்சிகளின் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் இந்த வரைவு சட்டத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

பாகிஸ்தானின் இந்த சட்டத்திற்கு இந்திய சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்த நிலையில், இந்தியாவிலும் இதுபோன்ற கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என குரல் கொடுத்துள்ளனர்.

மூலக்கதை