சுகாதார அமைப்பில் அமெரிக்கா: பைடன்

தினமலர்  தினமலர்
சுகாதார அமைப்பில் அமெரிக்கா: பைடன்

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன் நேற்று தன் 79வது பிறந்த நாளை கொண்டாடினார்.

''உலக சுகாதார அமைப்பில் அமெரிக்கா மீண்டும் இணையும்'' என ஜோ பைடன் நேற்று தெரிவித்தார். சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார். வரும் ஜன. 20ல் அவர் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார்.

பெருமை :

இந்நிலையில் ஜோ பைடன் தன் 78வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அமெரிக்காவில் மிக அதிக வயதில் அதிபரானவர் என்ற பெருமையும் பைடனுக்கு கிடைக்க உள்ளது. இதற்கு முன் ரொனால்டு ரீகன் தான் மிக அதிக வயதில் அமெரிக்க அதிபராக இருந்துள்ளார். 1981 - 89 வரை அதிபராக இருந்த ரீகன் பதவியிலிருந்து விலகிய போது அவரது வயது 77 ஆண்டுகள் மற்றும் 349 நாட்களாக இருந்தது.

தற்போது அதிபராக பதவியேற்க உள்ள பைடனுக்கு 78 வயது முடிந்துவிட்டதால் மிக அதிக வயதில் அமெரிக்க அதிபரானவர் என்ற பெருமை கிடைக்க உள்ளது. ஜோ பைடன் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது:டொனால்டு டிரம்பின் செயல்பாடுகளை பார்த்தாலே அமெரிக்காவின் பொறுப்பற்ற அதிபர் அவர் தான் என எல்லாருக்கும் புரியும்.தேர்தல் முடிவுகளை முறியடிக்கும் அவரது முயற்சிகள் விதிமுறைக்கு உட்பட்டது அல்ல.

மீண்டும் இணையும் :

மிக்சிகனில் நாங்கள் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. ஜன. 20ல் நாங்கள் பதவியேற்கப் போவது நிச்சயம்.ஆனால் டிரம்பின் நடவடிக்கை மிகவும் மூர்க்கத்தனமாக உள்ளது. அவர் என்ன நினைக்கிறார்; என்ன செய்யப் போகிறார் என யாராலும் கூறமுடியாது.உலக சுகாதார அமைப்பில் அமெரிக்கா மீண்டும் சேரும் அதேபோல் பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திலும் அமெரிக்கா மீண்டும் இணையும்.இவற்றிலிருந்து விலகுவது என அதிபர் டிரம்ப் எடுத்த முடிவு மிகவும் தவறு. கொரோனா பற்றிய உண்மையான தகவல்களை சீனா தராதது பெரும் தவறு.இவ்வாறு அவர் கூறினார்.

'அமெரிக்காவை சீரழித்து விட்டார்'


அமெரிக்காவில் வசிக்கும் சீக்கியர் தலைவர்களில் ஒருவர் குரீந்தர் சிங் கல்சா. இந்திய வம்சாவளியை சேர்ந்த அவர் குடியரசு கட்சியில்உறுப்பினராக உள்ளார்.இந்நிலையில் டொனால்டு டிரம்ப் பற்றி அவர் கூறியதாவது: அமெரிக்காவில் இருந்த அதிபர்களிலேயே மிகவும் மோசமானவர் டிரம்ப். இவரது ஆட்சியில் அமெரிக்கா பிளவு பட்டு விட்டது. அமெரிக்காவை சீரழித்து விட்டார்.சர்வதேச அளவில் அமெரிக்காவின் மதிப்பு குறைந்து விட்டது. இதை சரிப்படுத்த பலஆண்டுகள் ஆகும். இதனால் தான் குடியரசுகட்சியின் உறுப்பினராக இருந்தும் டிரம்ப்புக்கு நான் ஓட்டுப் போடவில்லை.இவ்வாறு அவர் கூறினர்.

மூலக்கதை