போட்டோவுக்கு போஸ் கொடுக்க மட்டுமே இந்திய உறவு - டிரம்பை விளாசும் பிடன்

தினமலர்  தினமலர்
போட்டோவுக்கு போஸ் கொடுக்க மட்டுமே இந்திய உறவு  டிரம்பை விளாசும் பிடன்

வாஷிங்டன்: அமெரிக்க - இந்திய உறவை போட்டோவுக்கு போஸ் கொடுக்க மட்டுமே டிரம்ப் பயன்படுத்தினார். நான் காரியங்களை செய்து முடிப்பேன் என பிடன் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் 20 லட்சம் இந்திய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்தஎண்ணிக்கை குறிப்பிட்ட சில மாநிலங்களில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக மாறக்கூடும் என இரு கட்சியின் அதிபர் வேட்பாளர்களும் கணித்துள்ளனர். இதனால் இந்திய - அமெரிக்க உறவு பற்றி தொடர்ந்து பேசி வருகின்றனர். கருத்துக்கணிப்பிலோ இந்திய அமெரிக்க உறவுக்கு அமெரிக்க இந்தியர்கள் கடைசி இடமே தந்துள்ளனர். அவர்களுடைய கவலை நல்ல சுகாதார வசதியாக உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் இந்தியர்களுக்காக வெளியாகும் 'வெஸ்ட் இந்தியா' பத்திரிகையில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: 2008-ம் ஆண்டில் அமெரிக்க செனட் வெளியுறவுக் குழுவின் தலைவராக, வரலாற்று சிறப்பு மிக்க இந்தியா-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் பங்கு வகித்தேன். அமெரிக்காவும் இந்தியாவும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டால், உலகம் பாதுகாப்பான இடமாக இருக்கும் என அப்போது கூறினேன். ஒபாமாவின் 2009-2016 பதவிக்காலம் இரு நாடுகளுக்கிடையில் சிறந்த ஆண்டுகளாகும். நானும் இந்திய வம்சாவளி துணை அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரீஸ் அதனை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வோம். நாம் இயற்கையான கூட்டாளிகள்.

நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியாவுடன் இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவோம். சீனா அதன் அண்டை நாடுகளை அச்சுறுத்தாத வகையில், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவோம். நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல்கள், சமத்துவம், கருத்து மற்றும் மத சுதந்திரம் இது போன்று எண்ணற்ற வலிமையை இரு நாடுகளும் நமது பன்முகத்தன்மையிலிருந்து பெறுகின்றன. இந்த அடிப்படை கொள்கைகள் ஒவ்வொரு நாடுகளின் வரலாறுகளிலும் நீடித்திருக்கின்றன. எதிர்காலத்திலும் இது தொடரும். இவ்வாறு எழுதியுள்ளார்.

மூலக்கதை